Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வயலில் டிரோன் மூலம் உரம் தெளிப்பு: ஆள் பற்றாக்குறையை சமாளிக்க விவசாயியின் புதிய யுக்தி

ஏப்ரல் 27, 2021 06:50

கும்பகோணம் அருகே விவசாயத் தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க, பொறியியல் பட்டதாரி யான விவசாயி ஒருவர் நெல் வயலில் டிரோன் மூலம் உரம் தெளிக்கும் பணியில் ஈடு பட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள கடிச்சம்பாடியைச் சேர்ந்தவர் விவசாயி வெங்கட்(35). இவர், தனக்கு சொந்தமான 5 ஏக்கர் விளை நிலத்தில் கோடை நெல் சாகுபடி செய்துள்ளார். இப்பகுதியில், தற்போது விவசாய கூலித் தொழி லாளர்களுக்கு பற்றாக்குறை நிலவி வருவதால், தனது வயலில் ஆளில்லா விமானம் எனப்படும் டிரோன் மூலம் உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிக்க வெங்கட் திட்டமிட்டார்.

இதையடுத்து, ரூ.4.5 லட்சத்துக்கு பெரிய அளவிலான டிரோனை விலைக்கு வாங்கிய அவர், தனது வயலில் சாகுபடி செய்துள்ள நெற்பயிர்களுக்கு டிரோன் மூலம் பஞ்சகவ்யம் எனப்படும் திரவ வடிவிலான இயற்கை உரத்தை நேற்று தெளித்தார். அதன்படி, டிரோனின் மேலுள்ள கேனில் பஞ்சகவ்யம் மருந்து அடைக்கப்பட்டது. பின்னர், ஆன்ட்ராய்டு செல்போன் மூலம் இந்த டிரோன் இயக்கப்பட்டு, வயலின் மேல் பறக்கவிடப் பட்டு உரம் தெளிக்கப்பட்டது.

இதுகுறித்து வெங்கட் கூறியது: நான் பொறியியல் படித்துவிட்டு, விவசாயப் பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். இந்தப் பகுதியில் விவசாய கூலித் தொழிலாளர்களுக்கு பற்றாக் குறை நிலவி வருவதுடன், கூலியும் அதிகமாக உள்ளது. எனவே, விவசாயப் பணிகளில் இயந்திரங்களை பயன்படுத்த திட்டமிட்டேன். அதன்படி, முதற்கட்டமாக டிரோன் மூலம் வயல்களில் உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன். தற்போது, நெற்பயிருக்கு அடியுரமான பஞ்சகவ்யம் டிரோன் மூலம் தெளிக்கப்பட்டது. அப்போது, ஒரு ஏக்கரில் 2 பேர் 2 நாட்களில் செய்யக்கூடிய வேலையை, இந்த டிரோன் 15 நிமிடங்களில் செய்து முடித்தது. உளுந்து உள்ளிட்ட சிறுதானியங்களை விதைக்கவும் இந்த டிரோனை பயன்படுத்தலாம் என்றார்.

இதுகுறித்து அறிந்த கும்பகோணம் எம்எல்ஏ சாக் கோட்டை க.அன்பழகன் அங்கு சென்று, டிரோன் மூலம் உரம் தெளிக்கும் பணியைப் பார்வையிட்டு, புதிய யுக்தியை கையாளும் விவசாயிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்