Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அமெரிக்காவில் இருந்து 318 ஆக்சிஜன் செறிவூட்டிகள்: துபாயில் இருந்து 2 டேங்கர்கள் டெல்லி வந்தடைந்தன

ஏப்ரல் 27, 2021 05:45

புதுடெல்லி: இந்தியாவில் பெருகி வரும் ஆக்சிஜன் தேவையை சமாளிப்பதற்காக அமெரிக்காவில் இருந்து 318 ஆக்சிஜன் செறிவூட்டிகள் டெல்லி கொண்டு வரப்பட்டன. கொரோனா 2-வது அலையால் இந்தியாவில் மருத்துவ ஆக்சிஜனுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. போதிய அளவு ஆக்சிஜன் இல்லாததால் டெல்லி ஆஸ்பத்திரியில் கடந்த 24-ந் தேதி 20 நோயாளிகள் மரணமடைந்தனர்.

ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடிக்கு தீர்வு காண மத்திய அரசு வெளிநாடுகளில் இருந்து ஆக்சிஜன் இறக்குமதி செய்து வருகிறது. மேலும் ஆக்சிஜன் உற்பத்திக்கான தளவாடங்களும் வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்படுகின்றன. அந்தவகையில் அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் நேற்று 318 ஆக்சிஜன் செறிவூட்டிகள் டெல்லி கொண்டு வரப்பட்டன. இது ஆக்சிஜன் உற்பத்திக்கு பெரும் உதவியாக இருக்கும் என நம்பப்படுகிறது.

ஆக்சிஜன் பற்றாக்குறை ஒருபுறம் இருக்க, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை தேவை இருக்கும் இடங்களுக்கு கொண்டு செல்வதிலும் மிகப்பெரும் சிக்கல் நிலவி வருகிறது. வீரியம் மிகுந்த இந்த வாயுவை பத்திரமாக எடுத்துச்செல்வதற்கு போதுமான தளவாடங்கள் இல்லாததால் ஆக்சிஜன் போக்குவரத்திலும் கடும் நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.

எனவே இதற்கான தளவாடங்களையும் வெளிநாடுகளில் இருந்து உதவியாகவும், இறக்குமதியாகவும் மத்திய அரசு பெற்று வருகிறது. அந்தவகையில் துபாயில் இருந்து 2 காலி ஆக்சிஜன் டேங்கர்கள் விமானப்படை விமானம் மூலம் இந்தியா கொண்டு வரப்படுகின்றன. இதற்காக விமானப்படையின் சி-17 விமானம் ஒன்று துபாய் சென்றுள்ளது.

முன்னதாக 4 கிரையோஜெனிக் டேங்கர்களை ஆக்சிஜன் போக்குவரத்துக்காக சிங்கப்பூரில் இருந்து கடந்த 24-ந் தேதி இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.
இவ்வாறு கொண்டு வரப்பட்டுள்ள டேங்குகள் மற்றும் கன்டெய்னர்களை ஆக்சிஜன் நிரப்பும் நிலையங்களுக்கு மத்திய அரசு தொடர்ந்து அனுப்பி வருகிறது. இந்த பணிகளை உள்துறை அமைச்சகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
 

தலைப்புச்செய்திகள்