Friday, 10th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஜனநாயக படுகொலை: மாயாவதி

ஏப்ரல் 16, 2019 06:08

புதுடில்லி: தேர்தல் விதிகளை மீறியதால் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதிக்கு பிரசாரம் செய்ய 48 மணி நேரம் தடை விதித்துள்ளது தேர்தல் கமிஷன். மாயாவதி மட்டுமின்றி உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், சமாஜ்வாதி கட்சியின் ஆசம் கான், மத்திய அமைச்சர் மேனகா ஆகியோருக்கும் பிரசாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாயாவதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.   தனக்கு விதிக்கப்பட்ட தடை குறித்து மாயாவதி கூறுகையில், இது ஜனநாயக படுகொலை. சிலர் கொடுத்த அழுத்தம் காரணமாகவே தேர்தல் கமிஷன் இந்த முடிவை எடுத்துள்ளது. அமித்ஷா, பிரதமர் மோடி வெறுப்புணர்வுடன் பேசுவதற்கு மட்டும் தேர்தல் கமிஷன் சுதந்திரம் அளித்துள்ளது. அது பற்றி புகார் வந்தால் மட்டும் தேர்தல் கமிஷன் காதுகளையும் கண்களையும் மூடிக் கொள்ளும்.   நான் ஜாதி மற்றும் மத பிரிவினையை தூண்டும் வகையில் ஏதும் பேசவில்லை. அதற்குபதிலாக, இஸ்லாமியர்கள் தங்களின் ஓட்டுக்களை பிரிக்காமல் எங்கள் கட்சிக்கு அளிக்க வேண்டும் என்று தான் கேட்டேன். தேர்தல் கமிஷன் இதை மிகைப்படுத்தி பார்க்கிறது. என்னை இஸ்லாமியர்களிடம் ஓட்டு கேட்கவிடாமல் செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்த தடை அமல்படுத்தப்பட்டுள்ளது என்றார்.   மாயாவதிக்கு ஆதரவாக அவருடன் கூட்டணியில் இருக்கும் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், மாயாவதி மீது தேர்தல் கமிஷன் விதித்துள்ள தடை கண்டிக்கதக்கது. இதே போன்று ராணுவத்தின் பெயரில் ஓட்டக் கேட்கும் பிரதமரின் பேச்சுக்களை இவர்களால் தடுத்து நிறுத்த முடியுமா? என கேள்வி எழுப்பி உள்ளார்.

தலைப்புச்செய்திகள்