Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கரோனா பரவலை தடுப்பது குறித்து பிரதமர் தலைமையில் உயர்நிலை ஆலோசனை

ஏப்ரல் 18, 2021 07:25

கடந்த பிப்ரவரி மத்தியில் நாடு முழுவதும் கரோனா வைரஸ் 2-வது அலை தொடங்கியது. தற்போது நாள்தோறும் 2 லட்சம் முதல் 2.5 லட்சம் பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு வருகிறது. பல்வேறு மாநிலங்களில் கரோனா தடுப்பூசி, வென்டிலேட்டர், ரெமிடெஸிவிர் மருந்து, ஆக்ஸிஜன் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.

கரோனா பரவலை தடுப்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8-ம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொலி வாயிலாக முக்கிய ஆலோசனை நடத்தினார். கடந்த 14-ம் தேதி மாநில ஆளுநர்களின் கருத்துகளை பிரதமர் கேட்டறிந்தார். அப்போது கரோனா தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதன்பிறகு நேற்று முன்தினம் பல்வேறு துறைகளை சார்ந்த மூத்த அதிகாரிகளுடன் பிரதமர் விவாதித்தார்.

இதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்கள், பல்வேறு துறைகளை சேர்ந்த மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். வெளிநாடுகளில் இருந்து கரோனா தடுப்பூசி, ஆக்ஸிஜன் சிலிண்டர் உள்ளிட்டவற்றை தேவைக்கு ஏற்ப இறக்குமதி செய்வது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா, அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்த வேண்டும்.
வைரஸ் பரவலை தடுப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டார்.

இதன்படி உள்துறை செயலாளர் அஜய் பல்லா, 6 மணி நேரத்துக்கு ஒருமுறை அனைத்து மாநில அரசுகளிடம் இருந்தும் கரோனா தொற்று தொடர்பான விவரங்களை பெற்று உரிய உத்தரவுகளைப் பிறப்பிப்பார். குறிப்பாக மாநில அரசுகளுக்கு தேவையான ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், வென்டிலேட்டர்கள், கரோனா தடுப்பூசி பிரச்சினைகளுக்கு உள்துறை செயலாளர் உடனடியாக தீர்வு காண்பார் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 

தலைப்புச்செய்திகள்