Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நிதிஷ், லாலு இணைப்புக்கு முயற்சி: பிரசாந்த் கிஷோர்

ஏப்ரல் 14, 2019 07:13

பாட்னா: :ஐக்கிய ஜனதா தளத்துடன், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தை இணைக்கும் முயற்சியில், தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் ஈடுபட்டதாக வெளியான தகவலுக்கு, அவர் மறுப்புதெரிவித்துள்ளார்.பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. 

தேர்தல் வியூக நிபுண ராக கருதப்படும், பிரசாந்த் கிஷோர், கடந்த ஆண்டு, ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் சேர்ந்தார். அவரை, கட்சியின் துணைத் தலைவராக, நிதிஷ் குமார் நியமித்தார். 

இந்நிலையில், பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத்தின் மனைவியுமான, ராப்ரி தேவி, சமீபத்தில் கூறியதாவது:லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், லாலுவை, பிரசாந்த் கிஷோர் சந்தித்தார். ராஷ்ட்ரீய ஜனதா தளத்தையும், ஐக்கிய ஜனதா தளத்தையும் இணைப்பதற்கு, முதல்வர் நிதிஷ் குமார் விரும்புவதாக தெரிவித்தார்.  

ஒரு பொதுவான பிரதமர் வேட்பாளரையும் நிறுத்த, நிதிஷ் ஆசைப்படுவதாகவும் தெரிவித்தார். ஆனால், லாலு, இதைஏற்கவில்லை.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.இந்த விவகாரம், பீஹார் அரசியல் வட்டாரத்தில், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ராப்ரியின் பேட்டிக்கு, பிரசாந்த் கிஷோர், மறுப்பு தெரிவித்துள்ளார். 

அவர் கூறியதாவது:மக்கள் பணத்தை கொள்ளையடித்து, விசாரணைக்காக, நீதிமன்றத்தின் படிகளில் ஏறிக் கொண்டிருப்பவர்கள், இப்போது, உண்மையின் பாதுகாவலனாக, தங்களை காட்டிக் கொள்ள முயற்சிக்கின்றனர்.இது பற்றி, லாலு எப்போது வேண்டுமானாலும், என்னுடன் சேர்ந்து, நிருபர்களை சந்தித்து, நாங்கள் பேசியது என்ன என்பதை தெரிவிக்கட்டும். யார், யாருக்கு கோரிக்கை விடுத்தனர் என்பது, அப்போது தெரியும்.இவ்வாறு, அவர் கூறினார். 

கிஷோர், எங்களை சந்தித்தது உண்மை. இந்த விவகாரத்தில், நிதிஷ் அமைதி காக்காமல், பதில் சொல்லட்டும். நிதிஷிடம் அனுமதி பெற்றபின், கிஷோர் தன் கருத்தை பதிவு செய்வது நல்லது.

தலைப்புச்செய்திகள்