Monday, 3rd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

87 நாடுகள் மாறிவிட்டன: நாம் எப்போது?

ஏப்ரல் 14, 2019 06:57

இந்தியா: தேர்தல் ஜனநாயக முறை, குறிப்பிட்ட சாராருக்கு மட்டுமே பயனளிக்கிற தன்மை கொண்டதாக மாறிவிட்டது. பண பலம், ஆள் பலம், மாபியா பலம், ஊடக பலம் யாரிடம் இருக்கிறதோ, அவர்கள் மட்டுமே தேர்தலில் வெற்றி பெறமுடியும். நீங்கள், 300 கொடுத்தால் அவர், 500 கொடுத்து உங்களை தோற்கடித்துவிடுவார். இதுதான், இன்றைய விசித்திர நிலை. 

தேர்தல் முடிவுக்குப் பின்னர், 'எங்களுக்கு இத்தனை சதவீத ஓட்டுக்கள் கிடைத்திருக்கின்றன. ஆனால், போதுமான இடங்கள் கிடைக்கவில்லை' என்று பல கட்சிகள் புள்ளி விபரங்களை சொல்லி புலம்புவதை கேட்கிறோம். இந்த விசித்திரத்துக்கும், புலம்பலுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்கு, நமது தேர்தல்முறையை, விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறையாக மாற்ற வேண்டும். 

அப்படி செய்தால் மட்டுமே, ஒவ்வொரு ஓட்டுக்கும் உண்மையான மதிப்பு கிடைக்கும். ஒரு தொகுதியில் அதிக ஓட்டு பெற்றவரே வெற்றி பெற்றவர். மேலோட்டமாக பார்த்தால், இதில் தவறு இருப்பதாக தெரியாது. ஆனால், பதிவான ஓட்டுகளில், 30 சதவீத ஓட்டுகளை பெற்று, முதல் இடத்தை பிடிப்பது இப்போது சகஜமாகி விட்டது. அதாவது, ஜெயித்தவர், 30 சதவீதம் பெற்றிருப்பார்.  

அதன் அர்த்தம் என்ன? 70 சதவீதம் பேருக்கு அவரை பிடிக்கவில்லை. ஆனால், அவருக்கு எதிராக, ஏழு பேர் நின்றதால், அந்த, 70 சதவீத ஓட்டுகள் அவர்களுக்கு ஆளுக்கு, 10 சதவீதமாக விழுந்திருக்கும். சுருக்கமாக சொல்லப் போனால், 30 சதவீத ஓட்டுக்கு மதிப்பு கொடுத்து அவரை, எம்.பி., அல்லது எம்.எல்.ஏ ஆக்குகிறது நமது தேர்தல் முறை. ஆனால், 70 சதவீத வாக்காளர்களின் ஓட்டுகளுக்கு எந்த மதிப்பும் தரவில்லை. 

இந்தியா போன்ற பல்வேறு மொழிகள், இனங்கள் கொண்ட சுவிட்சர்லாந்து நாட்டில் விகிதாச்சார ஓட்டுரிமை நடைமுறையில் இருக்கிறது. இந்தியாவில் இப்போதுள்ள தேர்தல் முறையை பின்பற்றிய, 89 நாடுகள், இன்று விகிதாச்சார பிரதிநிதித்துவ முறைக்கு மாறி விட்டன. 

உலகில் பெரும்பாலான நாடுகளில் அந்த நடைமுறைதான் உள்ளது. ஒவ்வொரு துறையிலும் முன்னேறுவதாக சொல்லப்படும் நமது நாடு, அனைத்து துறைகளுக்கும் தாயான, தேர்தல் துறையில் தேர்தல் முறையில் பின்தங்கி நிற்கலாமா? விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறையை கொண்டுவர கட்சிகளுக்கு நாம்தான் அழுத்தம் கொடுக்க வேண்டும். நாம் போடும் ஓட்டுக்கு மரியாதை வேண்டுமா, வேண்டாமா? யோசியுங்கள் மக்களே...

தலைப்புச்செய்திகள்