Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வேலூரில் வீடு வீடாக சென்று ரத்த மாதிரிகள் சேகரிப்பு

ஏப்ரல் 14, 2021 05:43

வேலூர்: வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் சுகாதார துறையினர் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பாற்றல் உள்ளதா? என பரிசோதனை செய்ய ரத்த மாதிரிகளை சேகரித்தனர். 

வீட்டில் உள்ளவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதா? என்ற விவரங்களை சேகரித்தனர்.படங்கள்: வி.எம்.மணிநாதன். வேலூர் மாநகராட்சியில் நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பான ஆய்வுக்காக பொதுமக்களிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், பொது மக்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறித்து ஆய்வு செய்ய சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது. 

இதற்காக ‘சீரோ சர்விலன்ஸ்’ என்ற பெயரில் கரோனா தொற்று அதிகம் பாதித்த பகுதிகளில் வசிக்கும் பொது மக்களிடம் ரத்த மாதிரிகளை சேகரிக்கும் பணியை தொடங்கி யுள்ளனர். அதன்படி, வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சத்துவாச்சாரி, வி.ஜி.ராவ் நகர், சிஎம்சி காலனி உள்ளிட்ட பகுதிகளில் வீடு, வீடாகச் சென்ற மருத்துவக் குழுவினர் ஒவ்வொரு குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரிடம் இருந்து ரத்த மாதிரிகளை சேகரித்தனர். 

சத்துவாச்சாரி பகுதியில் டாக்டர் சுதர்சன் தலைமையிலான குழுவினர் இந்த ஆய்வில் ஈடுபட்டனர். பொதுமக்களிடம் இருந்து சேகரிக்கப்படும் ரத்த மாதிரிகள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு ரத்தத்தில் உள்ள நோய் எதிர்ப்பு ஆற்றலை கணக்கிடவுள்ளனர். ஏற்கெனவே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களாக இருந்தாலோ அல்லது அறிகுறிகள் தென்பட்டு குணமடைந்தவர்கள் இருந்தாலோ அவர்களின் ரத்த மாதிரிகளையும் சேகரித்து வருகின்றனர். 

இது தொடர்பாக வேலூர் மாநகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர் சித்ரசேனாவிடம் கேட்டபோது, ‘‘வேலூர் மாநகராட்சியில் 7 இடங்களில் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்படு கின்றன. ஒவ்வொரு இடத்திலும் 30 மாதிரிகள் சேகரிக்கப்படும். இதன்மூலம் ரத்தத்தில் உள்ள நோய் எதிர்ப்பு திறன் ஆய்வு செய்ய உள்ளனர். இதன்மூலம் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப் படும்’’ என தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்