Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வாக்களிக்க ஹெல்மெட் அணிந்து வந்த வேட்பாளர்

ஏப்ரல் 10, 2021 08:12

கூச் பெஹார்: மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஹெல்மெட் அணிந்து வந்து திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் ஆச்சரியப்படுத்தினார். 

தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம், அசாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் 4 மாநிலங்களில் தேர்தல் முடிவடைந்து விட்டன.  மேற்கு வங்காள மாநில சட்டசபைக்கு 8 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டு, 3 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. இன்று 4வது கட்ட தேர்தல் நடக்கிறது.

திரிணாமுல் காங்கிரஸ் பொது செயலரும், மாநில மந்திரியுமான பார்த்தா சாட்டர்ஜி, பா.ஜ.க.வை சேர்ந்த நடிகை ஷ்ரபந்தி சாட்டர்ஜியை எதிர்த்து போட்டியிடுகிறார். திரிணாமுல் காங்கிரசில் இருந்து சமீபத்தில் விலகி பா.ஜ.க.வில் இணைந்த முன்னாள் மந்திரி ரஜிப் பானர்ஜி, ஹவுராவின் டோம்ஜுர் தொகுதியில் போட்டியிடுகிறார். இதனையடுத்து ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது.  ஓட்டுப்பதிவை முன்னிட்டு வாக்காளர்கள் காலையிலேயே தங்களுடைய அடையாள அட்டைகளுடன் ஆர்வமுடன் வாக்களிக்க வந்தனர்.  ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைவரும் அவர்களுக்கான தனித்தனி வரிசையில் நின்றனர். அவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை நடத்தப்பட்டது.  இதன்பின்னர் அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.  கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது.

சுன்சுரா தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளர் லாக்கட் சாட்டர்ஜி ஓட்டுப்பதிவுக்கு முன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.  இந்த தேர்தலில், பல பூத்களில் பா.ஜ.க.வினர் அமளியில் ஈடுபடுகின்றனர் என கூறி தேர்தல் ஆணையத்திற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது.

பா.ஜ.க.வின் குண்டர்கள் சீத்தல்குச்சி, நடால்பாரி, துஃபன்கஞ்ச் மற்றும் தின்ஹட்டா ஆகியவற்றில் உள்ள பல்வேறு பூத்களின் வெளியே நின்று கொண்டு எங்களுடைய கட்சி ஏஜெண்டுகளை உள்ளே வரவிடாமல் தடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.  இதுபற்றி தேர்தல் ஆணையம் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதன் ஒரு பகுதியாக கூச் பெஹாரில் உள்ள நடால்பாரி தொகுதிக்கான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரான ரவீந்திரநாத் கோஷ் தனது தலையில் ஹெல்மெட் அணிந்தபடி வாக்களிக்க புறப்பட்டு வந்துள்ளார்.  தேவையற்ற சம்பவங்களை தவிர்ப்பதற்காக நான் ஹெல்மெட் அணிந்துள்ளேன் என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.

தலைப்புச்செய்திகள்