Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஜனவரியில் மட்டும் ‘ஆன்லைன்’ வாயிலாக வாகனவரி 323 கோடி வசூல்

ஜனவரி 30, 2019 11:08

சென்னை : இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் வாகனவரி, ரூ.323 கோடி ‘ஆன்லைன்’ வாயிலாக செலுத்தப்பட்டுள்ளது. சிரமம் இல்லாத நடைமுறையால் வாகன ஓட்டிகள் நிம்மதியடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளன. இங்கு, பழகுனர் உரிமம், லைசென்ஸ், வாகனப்பதிவு, பர்மிட் பெறுதல், முகவரி மாற்றுதல், வாகனவரி செலுத்துதல், தற்காலிக வாகன பதிவு, வாகன அபராதம் செலுத்துதல், லைசென்ஸ் புதுப்பித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளுக்காக ஆங்காங்குள்ள ஆர்.டி.ஓ அலுவலகங்களுக்கு செல்லும் பொதுமக்கள், சம்மந்தப்பட்ட பணிக்கான கட்டணத்தை முதலில் செலுத்த வேண்டும்.  
அதன்பிறகு அதிகாரிகள் அதற்கான ரசீதை வழங்குவார்கள். அந்த ரசீதை விண்ணப்ப படிவத்தில் இணைத்து அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும். அதன்பிறகே பணிகள் மேற்கொள்ளப்படும். இந்தநடைமுறையே பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்தது. இவ்வாறான நடைமுறையால் ஆர்டிஓ அலுவலங்களுக்கு செல்வோர் நீண்ட நேரம் கால்கடுக்க நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒருசில நாட்களில் ஒன்று, இரண்டு நாட்கள் கூட ஆர்டிஓ அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு வந்தது.  

இதனால் பலரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மேலும் அவ்வாறு ஆர்டிஓ அலுவலகத்திற்கு செல்வோரை, அங்கு சுற்றித்திரியும் சில புரோக்கர்கள் வளைத்து பணியை விரைந்து முடித்துத்தருவதாக கூறி, பணம் பறித்து வந்தனர். சிலநேரங்களில் அந்த புரோக்கர்களை நம்பி பணம் கொடுக்கும் பலர் வேலை முடியாமலும், பணத்தை இழந்தும் தவித்து வந்தனர். இதைதடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். 

இதுகுறித்து ஆலோசித்து வந்த அதிகாரிகள் ஆர்டிஓ அலுவலகங்களில் அனைத்து நடைமுறையும் ‘ஆன்லைன்’ மூலம் செய்யும் வகையில் கொண்டுவரப்பட்டது. இதனால் வரிசெலுத்துதல், விண்ணப்பித்தல் அனைத்தையும் வீட்டில் இருந்தபடியே மக்கள் செய்து கொள்ளலாம். இதன்மூலம் மக்களின் நேரம், அலைச்சல் ஆகியவை குறைக்கப்பட்டது. இதனால் பல்வேறு தரப்பினரும் ‘ஆன்லைன்’ வாயிலாகவே, தங்களது பணிகளை செய்து வருகிறார்கள். குறிப்பாக வாகனவரி செலுத்துவோர், அலுவலகத்துக்கு செல்வதை தவிர்த்து ‘ஆன்லைன்’ வாயிலாகவே செலுத்தி வருகிறார்கள்.  

இவ்வாண்டு ஜனவரி மாதத்தில், 373 கோடி ரூபாய் வாகனவரி செலுத்தப்பட்டுள்ளது. இதில் ‘ஆன்லைன்’ மூலமாக மட்டும், 323 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. இதர தொகை ரொக்கம் மற்றும் டிடி மூலமாக செலுத்தப்பட்டுள்ளது. கடந்த, 2018ம் ஆண்டு இதே ஜனவரியில் மொத்தமாக, 370 கோடி ரூபாய் வாகன வரி செலுத்தப்பட்டது. இதில், வாகன ஓட்டிகள், 368 கோடியை ரொக்கமாக அரசுக்கு செலுத்தினர். அப்போது ஆன்லைனில் வெறும், 11 லட்சம் ரூபாய் மட்டுமே செலுத்தப்பட்டது. மீதி தொகை டிடி வாயிலாக செலுத்தப்பட்டது. இவ்வாண்டு ‘ஆன்லைன்’ நடைமுறை கொண்டுவரப்பட்டதால், அது எளிதாக இருப்பதால் பல்வேறு தரப்பினரும் வீட்டில் இருந்தபடியே வாகனவரியை ‘ஆன்லைன்’ல் செலுத்தி வருகிறார்கள். இதேபோல் மற்ற பணிகளும் ‘ஆன்லைன்’ வாயிலாக மேற்கொள்வதற்கு பலரும் ஆர்வம் காட்டுகின்றனர்.

தலைப்புச்செய்திகள்