Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்க கோரி அதிமுக நிர்வாகிகள் மனு 

ஏப்ரல் 09, 2021 10:05

சென்னை: சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்க கோரி அதிமுக நிர்வாகிகள் தாக்கல் செய்த மனுவிற்கு சசிகலா பதிலளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டு சென்னையில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், அதிமுக நிர்வாகிகளாக சசிகலாவையும், தினகரனையும் தேர்ந்தெடுத்தது செல்லாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இந்நிலையில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து சசிகலா மற்றும் தினகரன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 12 தீர்மானங்களும் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் எனவும் தங்களை கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லாது என்று அறிவிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்தனர்.

அதன்படி உரிமையியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, அமமுக என்ற பெயரில் கட்சியை தொடங்கி நடத்தி வருவதால் இந்த வழக்கில் இருந்து விலகிக் கொள்வதாக டி.டி.வி. தினகரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று மீண்டும் இந்த வழக்கு நீதிபதி ரவி முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, சசிகலா தொடர்ந்த இந்த வழக்கை நிராகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணப்பாளர் பழனிசாமி மற்றும் அவைத்தலைவர் மதுசூதனன் ஆகியோர் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மனுவிற்கு ஏப்ரல் 23 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என சசிகலாவிற்கு உத்தரவிட்ட நீதிபதி, இந்த வழக்கின் விசாரணையை ஏப்ரல் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். 

தலைப்புச்செய்திகள்