Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

போடி தொகுதியில் கடைசி 2 மணி நேரத்தில் வாக்குப்பதிவு 14% உயர்வு

ஏப்ரல் 08, 2021 01:54

தேனி: தேனி மாவட்டம், போடி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் தங்கதமிழ்செல்வன் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். கடந்த 10 ஆண்டுகளாக போடி தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஓபிஎஸ் தொகுதி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற அதிருப்தி தொகுதி முழுவதும் வாக்காளர் மத்தியில் பரவியிருந்தது. இதனால் ஓபிஎஸ் வாக்கு சேகரிக்க செல்லும்போது அவருக்கு எதிர்ப்புகள் வலுத்தன.

இதனால் ஓபிஎஸ் தரப்பிலிருந்து வாக்காளர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.2,000 வரை தேர்தலுக்கு முந்தைய நாள் வழங்கினர். இருப்பினும் போடி தொகுதியில் வாக்குப்பதிவு நாளான நேற்று முன்தினம், பெருவாரியான வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் ஆர்வமுடன் திமுகவுக்கு ஆதரவாக வாக்களித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அதிமுக தரப்பில் தோல்வி முகத்தில் களையிழந்து இருந்தனர். திடீரென இத்தொகுதிக்கு உட்பட்ட பெருமாள்கவுண்டன்பட்டியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம்பி கார் மீது கல்வீச்சு சம்பவம் நடந்தது. இச்சம்பவத்தை காரணம் காட்டி தேர்தல் பணிக்காக வரவழைக்கப்பட்ட பாதுகாப்பு போலீசார் பெருமாள்கவுண்டன்பட்டியில் குவிக்கப்பட்டனர்.

காலை 9 மணி நிலவரப்படி 3.65 சதவீதம், 11 மணி நிலவரப்படி 21.34 சதவீதம், 1 மணி நிலவரப்படி 33.17 சதவீதம், 3 மணி நிலவரப்படி 51.21 சதவீதம், 5 மணி நிலவரப்படி 62.51 சதவீதமும் வாக்குப்பதிவு நடந்திருந்தது. இரவு 7 மணி நிலவரப்படி மொத்தம் 76.30 சதவீதம் வாக்குப்பதிவாகி உள்ளது. வாக்குப்பதிவு தொடங்கிய காலை 7 மணியில் இருந்து வாக்குப்பதிவு சதவீதம் சராசரியாக உயர்ந்த நிலையில், கடைசி 2 மணி நேரத்தில் இத்தொகுதியில் உள்ள பெரும்பாலான வாக்குச்சாவடிகள் கூட்டம் இல்லாத நிலையில் திடீரென சுமார் 14 சதவீதம் வாக்கு பதிவானதாக கூறியிருப்பது வாக்காளர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சந்தேகத்தையும் உருவாக்கியுள்ளது. கவனத்ைத திசை திருப்பி கள்ள ஓட்டு போடப்பட்டதா என்ற சந்தேகம் எதிர்கட்சியினர், பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தலைப்புச்செய்திகள்