Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஊழியர்கள் வேலை நிறுத்தம்: அரசு பஸ் சேவை முடங்கியது 

ஏப்ரல் 08, 2021 01:19

பெங்களூரு: கர்நாடகத்தில் போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் அரசு பஸ்கள் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது. இதனால் பொதுமக்கள் கடுமையாக அவதிப்பட்டனர். இதைதொடர்ந்து தனியார் பஸ்கள் இயங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.

கர்நாடக அரசு போக்குவரத்து ஊழியர்கள் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம், 6-வது ஊதிய குழு பரிந்துரைப்படி சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய அரசு, அரசு ஊழியராக்க வேண்டும் என்ற கோரிக்கையை தவிர்த்து பிற 9 கோரிக்கைகளை 3 மாதத்தில் நிறைவேற்றுவதாக அரசு உறுதியளித்தது. இதையடுத்து ஊழியர்கள் தங்களின் வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.

ஆனால் போக்குவரத்து துறை அளித்த வாக்குறுதிப்படி 6-வது ஊதிய குழு பரிந்துரைப்படி சம்பள உயர்வு உள்ளிட்ட சில கோரிக்கைகளை இன்னும் நிறைவேற்றவில்லை. இந்த நிலையில் இந்த சம்பள உயர்வு உள்ளிட்ட நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஏப்ரல் மாதம் 7-ந் தேதி (அதாவது நேற்று) முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் ஏற்கனவே அறிவித்தனர்.

அந்த அறிவிப்பின்படி போக்குவரத்து ஊழியர்கள் நேற்று முதல் தங்களின் வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். இதையொட்டி  அனைத்து மாவட்டங்களிலும் பெரும்பாலான ஊழியர்கள் பணிக்கு ஆஜராகவில்லை. இதனால் அரசு பஸ்களின் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது. இதனால் தனியார் பஸ்கள், பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதி வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது.

  

தலைப்புச்செய்திகள்