Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரெயில் நிலையத்தில் பிளாட்பாரம் டிக்கெட் ரூ.50 ஆக உயர்த்தப்பட்டதால் கூட்டம் குறைந்தது

மார்ச் 31, 2021 09:17

சென்னை:கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்த முக்கிய ரெயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட் விலை உயர்த்தப்பட்டது.பயணிகளை ரெயிலில் ஏற்றிவிட வருகிற உறவினர்கள், நண்பர்கள் பிளாட்பாரம் வரை வருவதால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இதனை தவிர்ப்பதற்காக சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், காட்பாடி, செங்கல்பட்டு ஆகிய ரெயில் நிலையங்களில் மட்டும் பிளாட்பார டிக்கெட் கட்டணம் ரூ.10-லிருந்து ரூ.50 ஆக உயர்த்தப்பட்டது.

கடந்த 10-ந் தேதி முதல் இந்த கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்ததால் ரெயில் நிலையங்களில் நெரிசல் குறைந்துள்ளது. எழும்பூர் ரெயில் நிலையத்தில் பிளாட்பார டிக்கெட் இல்லாதவர்கள் காணப்பட்டால் அபராத நடவடிக்கையும் தொடரப்பட்டது. பிளாட்பாரம் டிக்கெட் கட்டணம் ரூ.10 ஆக இருந்த போது தினமும் 2000 பேர் ரெயில் நிலையத்திற்கு வந்து சென்றனர்.ஆனால் கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகு இந்த எண்ணிக்கை 2 மடங்கு குறைந்துள்ளது. தினமும் 650-700 பேர் வரை பிளாட்பாரம் டிக்கெட் பெற்று நிலையத்திற்குள் வருகிறார்கள்.

இதனால் நாள் ஒன்றுக்கு ரூ.35 ஆயிரம் வருவாய் கிடைக்கிறது. இதன் மூலம் வருவாய் ஈட்டுவது நோக்கமில்லை என்றாலும், கொரோனா தொற்று காலத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பிளாட்பாரம் டிக்கெட் உயர்த்தப்பட்டதால் பயணிகள் குடும்பமாக தற்போது வருவதில்லை. வயதானவர்களுக்கு மட்டுமே உறவினர்கள் கூட வருகிறார்கள். மற்ற பயணிகளுடன் குடும்பத்தினர் வருவது தவிர்க்கப்பட்டுள்ளது.கொரோனா கட்டுப்பாட்டுக்கு வந்து இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகு பிளாட்பார கட்டணம் மீண்டும் குறைக்கப்படும் என்று அதிகாரி தெரிவித்தார்.
 

தலைப்புச்செய்திகள்