Monday, 3rd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தஞ்சையில் தனியார் வேளாண் கல்லூரி மாணவர்கள் 24 பேருக்கு கொரோனா

மார்ச் 29, 2021 02:19

தஞ்சாவூர்:தஞ்சை அருகே வேளாண் கல்லூரி மாணவர்கள் 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்ட கல்லூரிகளின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இரண்டு தினங்களுக்கு முன்பு வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 19 ஆயிரத்து 281 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும் கொரோனா தொற்றை தடுக்க மாவட்ட நிர்வாகமும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
குறிப்பாக பள்ளி மாணவ, மாணவிகளிடம் மட்டுமே தொற்று அதிகரித்து வருகிறது.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள அம்மாப்பேட்டை அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கு முதன் முதலாக கொரோனா தொற்று ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் கொரோனா தொற்று ஏற்பட்டு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.இதைத் தொடந்து மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இணைய வழியில் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 16 பள்ளிகள், 4 கல்லூரிகளை சேர்ந்த 227 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என 243 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

இதில் 120-க்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பினர். இந்த நிலையில் தஞ்சை அருகே உள்ள ஒரு தனியார் வேளாண் கல்லூரியில் 2, 3-ம் ஆண்டு படிக்கும் மாணவிகள் 22 பேருக்கும், மாணவர்கள் 2 பேருக்கும் என 24 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் தொற்று பாதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 251 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தொற்று பாதிக்கப்பட்ட கல்லூரிகளின் எண்ணிக்கையும் 5 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து சம்பந்தப்பட்ட கல்லூரியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டடது. மேலும் கல்லூரியும் மூடப்பட்டது. இந்த கல்லூரியை சேர்ந்த 269 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் 24 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் 30 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வர வேண்டி உள்ளது. மற்றவர்களுக்கு தொற்று இல்லை.

தலைப்புச்செய்திகள்