Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழ் மொழி, கலாச்சாரத்தை பாஜக பாதுகாக்கும்: ஜே.பி.நட்டா உறுதி

மார்ச் 26, 2021 04:48

கடலூர்: தமிழ் மொழி, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை பாஜக பாதுகாக்கும் என, திட்டக்குடியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்தார்.அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் திட்டக்குடி தனித் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தடா து.பெரியசாமியை ஆதரித்து இன்று திட்டக்குடியில் வாக்குச் சேகரிப்பில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா பேசியதாவது:

"தமிழ்ச் சொந்தங்களே, தமிழ் மொழி, இலக்கணம், கலாச்சாரம் தொன்மை வாய்ந்தது. முருகக் கடவுளை இழிவுபடுத்தும் வகையில் கந்த சஷ்டி கவசத்தை அவதூறாகப் பரப்பிய கறுப்பர் கூட்டத்தை தமிழகத்தில் உள்ள எந்தக் கட்சியும் கண்டிக்க முன்வராத நிலையில், பாஜக அதைக் கண்டித்து வேல் யாத்திரை நடத்தி அவர்களுக்குப் பாடம் புகட்டியது. அதன் விளைவாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினே கையில் வேல் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதுவே தமிழ்க் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் பாஜக பாதுகாக்கும் என்பதற்கான சிறந்த உதாரணம்.

கடந்த காலத்தில் ஜக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் தமிழகத்திற்கு ஆண்டுக்கு 90 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது பாஜக ஆட்சியில் தமிழகத்திற்கு இதுவரை ரூ.19 லட்சத்து 50 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, நடப்பு நிதியாண்டுக்கு தமிழகத்திற்கு ரூ.2 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், பாஜக அமைச்சரவையில் நிர்மலா சீதாராமன் மற்றும் ஜெய்சங்கர் ஆகிய இரு தமிழர்கள் முக்கியத் துறைகளில் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் தமிழர்களுக்கு உரிய அந்தஸ்தை வழங்கி தமிழர்களின் மீது பாஜக எந்த அளவுக்கு நன்மதிப்பை வைத்திருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் வகையில் மத்திய அரசு சென்னை, கோவை, திருப்பூர், சேலம் ஆகிய பகுதிகளில் ரூ.7 லட்சம் கோடி மதிப்பில் ராணுவத் தளவாடத் தொழில் மையம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.நெசவுத் தொழிலை மேம்படுத்த 16 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

தேசிய கல்விக் கொள்கையின் மூலம் 8-ம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வி வலியறுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்திற்கு எய்ம்ஸ் உட்பட 11 மருத்துவக் கல்லூரிகளை வழங்கி சலுகை காட்டியிருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் தமிழகம் எந்த அளவுக்கு பீடு நடை போட முடியுமோ அந்த அளவுக்குக் கொடுக்கும்.

தமிழகம் ஆன்மிகத்தில் சிறந்து விளங்கக்கூடிய மண். 48 ஆயிரம் இந்து கோயில்கள் இந்த மண்ணில் உள்ளன. வள்ளலார், 63 நாயன்மார்கள் பிறந்தனர். உலகத்திற்கு இந்தியா தந்த பொக்கிஷம் தமிழ். இந்த உலகம் எல்லோருக்கும் பொதுவானது என்பதை உணர்த்துகின்ற பூமி இந்த தமிழகம். பாஜகவும் இந்த உன்னதமான கொள்கையை உடையதுதான்.பாஜக அறிவியல் பூர்வமாகச் சிந்தித்து இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் கட்சி. எனவே, இந்தத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் தடா பெரியசாமியை ஆதரித்து வெற்றி பெறச் செய்யவேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்". என்று ஜே.பி.நட்டா பேசினார்.

தலைப்புச்செய்திகள்