Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஸ்டாலின் கனவுதான் காண முடியும்- முதல்வர் ஆக முடியாது- இ.பி.எஸ்

மார்ச் 24, 2021 09:23

கரூர்:முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.சேலம் மாவட்டம் வாழப்பாடியில் முதல்கட்ட பிரசாரத்தை தொடங்கிய எடப்பாடி பழனிசாமி திருவாரூரில் முடித்தார். 2-ம் கட்ட பிரசாரத்தை திருத்துறைப்பூண்டியில் தொடங்கி தர்மபுரியில் முடித்தார்.இதையடுத்து அவர் 3-ம் கட்ட தேர்தல் சூறாவளி சுற்றுப்பயணத்தை இன்று கரூரில் தொடங்கி வருகிற 26-ந்தேதி வரை பிரசாரம் செய்கிறார். அதன்படி கரூரில் இன்று காலை கரூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை ஆதரித்து கரூர் பேருந்து நிலையம் மனோகரா ரவுண்டானாவில் பிரசாரம் செய்தார்.

பிரசாரத்தின்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:முன் அனுபவம் வாய்ந்த முன்னாள் அமைச்சர் சின்னசாமி இந்த இயக்கத்தில் மீண்டும் சேர்ந்திருப்பது இன்னும் இந்த கழகம் வலுப்பெறும். 12 ஆண்டுகள் அரசியல் வாழ்க்கையை வீணடித்து விட்டதாக சின்னசாமி சொன்னார். நான் அன்றே அண்ணா, அந்த கட்சி சரியில்லை, உண்மைக்கு இடமில்லை. உழைப்புக்கும், தியாகத்திற்கும் இடம் கிடைக்காது என்று சொன்னேன். ஏதோ சின்ன பிரச்சினையில் சென்றுவிட்டார். மீண்டும் தாய் கழகமான அ.தி.மு.க.விற்கு வந்துள்ளார். கரூர் மாவட்டம் மட்டுமல்லாமல் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தின் வளர்ச்சிக்கும் சின்னசாமி பங்காற்றினார். அவர் இந்த இயக்கத்திற்கு வந்ததை வரவேற்கிறேன்.

கரூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் எளிமையானவர். ஒரு வீட்டில், ஒரு குடும்பத்தில் ஒருவராக இருந்து கவனிக்க கூடியவர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மிகப்பெரிய இலாகாவான போக்குவரத்து துறையை வழங்கி, அதன் மூலம் நன்மதிப்பை பெற்றுள்ளார்.அனைவரையும் மதிக்க கூடிய சிறந்த வேட்பாளர். அவருக்கு இரட்டை இலையில் வாக்களித்து மாபெரும் வெற்றியை தேடித்தாருங்கள். அதேபோன்று கிருஷ்ணராயபுரம், குளித்தலை அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்திலும், அரவக்குறிச்சி தொகுதி பா.ஜ.க. வேட்பாளருக்கு தாமரை சின்னத்திலும் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்.

எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இந்த நாட்டு மக்களுக்காக உழைத்த தலைவர்கள். நசுக்கப்பட்ட ஏழை, எளிய கடைக்கோடி மக்களின் வாழ்க்கை ஏற்றத்திற்காக பாடுபட்டார்கள். கண்ணை இமை காப்பது போல மறைந்த முதல்வர் ஜெயலலிதா திட்டங்களை வாரி வாரி வழங்கியதால் இன்றைக்கு இந்தியாவில் தமிழகம் சிறந்த மாநிலமாக இருக்கிறது.தி.மு.க. ஒரு குடும்ப கட்சி, அது கட்சி அல்ல, கார்ப்பரேட் கம்பெனி. யார் வேண்டுமானாலும், பங்குதாரராக சேர்ந்து கொள்ளலாம். இப்போது செந்தில்பாலாஜி அங்கு பங்குதாரராக சேர்ந்திருக்கிறார். பங்குக்கு ஏற்ற பலனை தருவார்கள். ஆனால் அ.தி.மு.க. அப்படியல்ல. இங்கே நிற்கும் வேட்பாளர்கள் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்கள்.

அவர்களை உயர்ந்த அந்தஸ்துக்கு இந்த இயக்கம் கொண்டு வந்திருக்கிறது. இது உண்மையான ஜனநாயக இயக்கம். யார் உண்மையாக, விசுவாசமாக உழைத்தாலும் உயர்ந்த பதவிக்கு வரலாம். அது அ.தி.மு.க.வில் மட் டுமே நடக்கும். நான் கிளைக்கழக செயலாளராக, ஒன்றிய, மாவட்ட, மாநில பொறுப்பாளராக, எம்.எல். ஏ., எம்.பி.யாக, அமைச்சராக இப்போது உங்கள் ஆதரவுடன் முதல்வராக உங்கள் முன்பு நிற்கிறேன்.நான் என்றைக்கும் முதல்வர் என்று நினைப்பது கிடையாது. மக்கள்தான் முதல்வர்கள். மக்கள்போடும் உத்தரவை நிறைவேற்றுகிறேன். ஆனால் ஸ்டாலின் தன்னை முதல்வராக நினைத்துக் கொண்டு இருக்கிறார். ஸ்டாலின் முதல்வர் ஆவேன் என்று கனவுதான் காணமுடியும். அது ஒரு போதும் நிஜமாகாது என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
 

தலைப்புச்செய்திகள்