Monday, 3rd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பெங்களூருவில் போதைப்பொருள் விற்ற நைஜீரியாவை சேர்ந்தவர் உள்பட 2 பேர் கைது

மார்ச் 20, 2021 09:43

பெங்களூரு: பெங்களூருவில் போதைப்பொருள் விற்பனை செய்த நைஜீரியாவை சேர்ந்தவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.35 லட்சம் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு கப்பன் ரோட்டில் போதைப்பொருட்கள் விற்பனை செய்ய 2 பேர் காத்து நிற்பதாக கமர்சியல்தெரு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது சந்தேகப்படும் படியாக சுற்றிய 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அவர்களிடம் சோதனை நடத்திய போது, போதைப்பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த போதைப்பொருட்களை விற்பனை செய்ய 2 பேரும் காத்து நின்றதும் தெரியவந்தது.

இதையடுத்து, 2 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், அவர்கள் நைஜீரியாவை சேர்ந்த ஒகோரோ கிரஸ்சன் ஐபினி (வயது 36) மற்றும் பெங்களூரு டி.சி.பாளையா பகுதியை சேர்ந்த ரோகித் கிறிஸ்டோபர் (28) என்று தெரிந்தது. இவர்களில் ஒகோரோ கடந்த 2018-ம் ஆண்டு சுற்றுலா சம்பந்தப்பட்ட விசாவில் இந்தியாவுக்கு வந்திருந்தார். அவர், 3 மாதங்கள் மட்டுமே இந்தியாவில் தங்கி இருக்க அனுமதி இருந்தது.

ஆனால் விசா முடிந்த பின்பும் கடந்த 3 ஆண்டுகளாக பெங்களூருவில் சட்டவிரோதமாக தங்கி இருந்ததுடன் போதைப்பொருட்கள் விற்பனையில் ஒகோரோ ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. வெளிநாடுகளில் இருந்து பெங்களூருவுக்கு போதைப்பொருட்களை வரவழைத்து கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள், தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு அவர் விற்று வந்துள்ளார். இவரிடம் இருந்து குறைந்த விலைக்கு போதைப்பொருட்களை வாங்கி கே.ஆர்.புரம், ராமமூர்த்திநகர், அதை சுற்றியுள்ள பகுதிகளில் ரோகித் விற்பனை செய்ததும் தெரியவந்தது.

கைதானவர்களிடம் இருந்து 350 கிராம் எம்.டி.எம்.ஏ. போதைப்பொருள், விலை உயர்ந்த செல்போன்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.35 லட்சம் ஆகும். கைதான 2 பேர் மீதும் கமர்சியல் தெரு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்