Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பாஜக ஆட்சி வந்தால் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு- மோடி உறுதி

மார்ச் 18, 2021 12:43

புதுடெல்லி:சட்டசபை தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களிலும் பிரதமர் மோடி ஏற்கனவே பிரசாரம் மேற்கொண்டார். இப்போது வேட்பாளர் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் தொடங்கி உள்ள நிலையில், பிரதமர் மோடி மீண்டும் பிரசாரத்தை தொடங்கி உள்ளார்.அவர் அனைத்து மாநிலங்களிலும் தீவிர பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இன்று அவர் அசாம் மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களில் நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டங்களில் பேசினார்.முதலாவது நிகழ்ச்சியாக பகல் 11 மணிக்கு மேற்கு வங்காளத்தில் உள்ள புருலியாவில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.மாநிலம் முழுவதிலும் இருந்து தொண்டர்கள் புருலியாவில் குவிந்து இருந்தனர். பிரமாண்டமான முறையில் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து இருந்தார்கள். அதில் பிரதமர் உரை நிகழ்த்தினார்.

அப்போது மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜியை கடுமையாக விமர்சித்தார். அவருடைய ஆட்சி நிர்வாகத்தை பற்றி பல்வேறு குற்றச்சாட்டுகளை வெளியிட்டார். மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் மம்தா பானர்ஜி, பிரதமரை கடுமையான சொற்களால் தாக்கி வருகிறார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மம்தா பானர்ஜி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை பிரதமர் கூறினார்.சுதந்திர போராட்டத்திற்காக எண்ணற்ற தியாகங்களை செய்த மேற்கு வங்க தியாகிகளுக்கு நான் வணக்கத்தை செலுத்துகிறேன். இந்த மாநிலம் வரலாற்று புகழ் மிக்கது.ஆனால் தற்போது போதிய வளர்ச்சி இல்லாமல் பின்தங்கி இருக்கிறது. மாநில ஆளுங்கட்சியாக இருக்கும் திரிணாமுல் காங்கிரஸ், மாநிலத்தின் வளர்ச்சியை தடுத்து வருகிறது.

புருலியா பகுதியில் மக்களுக்கு போதிய குடிநீர் வசதிகள் செய்துதரப்படவில்லை. இதனால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். மாநில மக்களுக்காக மம்தா பானர்ஜி எந்தவொரு சிறந்த திட்டங்களையும் நிறைவேற்ற வில்லை. அவர் மக்களுக்காக என்ன செய்தார் என்பதை விளக்க வேண்டும்.ஆட்சி செய்வதில் அவர் தோல்வி அடைந்துவிட்டார். இங்கு நல்ல ஆட்சி அமைய வேண்டும். பா.ஜனதா ஆட்சி அமைந்தால், அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு ஏற்படுத்தப்படும். இப்போது உங்களுக்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மம்தா பானர்ஜி தன்னோடு இருப்பவர்களுக்கு மட்டும் தான் பணிகளை செய்கிறார். மக்களை பற்றி அவர் சிந்திக்கவில்லை. பா.ஜனதாவை பொறுத்தவரை மக்களின் அடிப்படை பிரச்சினைகள் ஒவ்வொன்றையும் தீர்க்க வேண்டும் என்பதுதான் குறிக்கோள் ஆகும்.மம்தா மீது மாநில மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். அவர் தேசத்திற்காக உயிர்நீத்தவர்களை அவமதிக்கும் வகையில் செயல்படுகிறார். இங்கே மாபியாக்களுடன் சிலர் கைகோர்த்து இருக்கிறார்கள். மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி பேசினார்.

தலைப்புச்செய்திகள்