Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சாதாரண ஏழையான எனக்கு கிடைத்த வாய்ப்பு: திருத்துறைப்பூண்டியில் போட்டியிடும் இ. க. வேட்பாளர் மாரிமுத்து

மார்ச் 18, 2021 12:37

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தொகுதி திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சி சார்பில் கோட்டூர் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் க.மாரிமுத்து வேட்பாளராக அறிவிக்கப்பட்டு போட்டியிடுகிறார். இவர் கட்சியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறார். கடந்த 13 ஆண்டு காலமாக கோட்டூர் ஒன்றியச் செயலாளராக உள்ளார்.

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. இதன் காரணமாக அப்பகுதி மக்களுக்கு, தொழிலாளர்களுக்கு விவசாயிகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளை முன்னிறுத்தி கம்யூனிஸ்ட் இயக்கங்கள் போராடி வரும் நிலையில், அந்த போராட்டங்களை கோட்டூர் ஒன்றியச் செயலாளராக இருந்து ஒருங்கிணைத்து நடத்தி வருகின்றவர்தான் க.மாரிமுத்து (49). இவர் கோட்டூர் ஒன்றியம் காடுவாகுடி கிராமத்தை சேர்ந்த கண்ணு - தங்கம்மாள் தம்பதியரின் மகனாவார்.

இவர் தாய், தந்தையர் உள்ளிட்ட குடும்பத்திலுள்ள அனைவருமே விவசாயக் கூலித் தொழிலாளர்கள்தான். இன்றளவும் இவரது மனைவி விவசாய கூலி வேலைக்கு சென்று சம்பாதித்து வருகிறார். இவர் தொடர்ச்சியாக கட்சிப் பணியாற்றினாலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அடையாளமாக சொல்லப்பட்டு வருகின்ற மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு போன்றே இவரும் யாரிடமும் அதிர்ந்து பேசாத குணமுடையவர். வயது வித்தியாசமின்றி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பணிவாக பழகுவதும், அன்பு காட்டுவதும் இவரது குணாதிசயம் என அவரை அறிந்தவர்கள் தெரிவிக்கிறார்கள்.

இவர் நேற்று (மார்ச் 17) தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அதில் தனது வங்கிக் கணக்கில் ரூ.58 ஆயிரம், மனைவியிடம் சேமிப்பு ரூ.1,000, 3 பவுன் தங்கச் சங்கிலி, 66 சென்ட் நிலம் உட்பட சுமார் ரூ.3 லட்சத்துக்கு இவரது சொத்து மதிப்பு உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த வங்கி கணக்குகள் ஓரிரு ஆண்டுகளுக்குள் தொடங்கியதுதான். தற்போது புயல், தொடர் மழை போன்ற பேரிடர் ஏற்பட்டாலும் இவரது வீடு நிவாரண முகாமில்தான் தங்கும் சூழல் உள்ளது. அந்த காலகட்டத்தில்கூட தனது குடும்பத்தை பொருட்படுத்தாமல் மற்றவர்களுக்காக களத்தில் நிற்பவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

இது குறித்து, மாரிமுத்துவிடம் கேட்டபோது, "நான் பி.காம் பட்டதாரி. நான் வசித்த தெருவில் நான் ஒருவனே படித்தவன். நான் பட்டப்படிப்பு படித்திருந்தாலும் கூலி வேலைக்கு சென்றால்தான் அடுத்த வேளைக்கு சாப்பாடு என்ற நிலையில், எனது குடும்பம் இருந்தது. எனது தாய், தந்தையர் சகோதரிகளோடு நாங்கள் கூலி வேலை செய்துதான் பிழைப்பு நடத்தி வந்தோம். இது ஒருபுறத்தில் இருக்க மற்றொரு புறத்தில் எங்கள் ஊர் கம்யூனிஸ்ட்டுகள் நிறைந்த பகுதி. உழைப்பாளிகளின் உரிமையை பாதுகாக்க வேண்டுமென்ற எனது அடிமனதில் இருந்த தேடல் காரணமாக நானும் பொதுவுடமை இயக்கத்தில் இணைந்து பணியாற்றினேன்.

தொடர்ச்சியாக இப்பகுதி மக்களுக்கு ஆற்றிய பணிகளை அங்கீகரித்து என்னை வேட்பாளராக நிறுத்தியுள்ளனர். கட்சியை கடந்து சாதாரண ஏழை என்கின்ற அடிப்படையில் எனக்கு கிடைத்த வாய்ப்பை இப்பகுதி மக்கள் அனைவரும் வரவேற்கின்றனர். இதன்மூலம் எதிர்காலத்திலும் எனக்கு கூடுதல் பொறுப்பு இருப்பதாகவே உணர்கிறேன். மனசாட்சிக்கு, மக்கள் நலனுக்கு விரோதமாக செயல்படக்கூடாது என்பதில் எதிர்காலத்திலும் உறுதியாக இருப்பேன" என தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்