Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஜி.எஸ்.டி. வரம்புக்குள் பெட்ரோல், டீசல் வருமா?

மார்ச் 16, 2021 07:10

புதுடெல்லி :உற்பத்தி வரி, வாட் வரி உள்ளிட்ட வரிகள் ஒருங்கிணைக்கப்பட்டு, ஜி.எஸ்.டி. வரியாக கடந்த 2017-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டன. ஆனால், ஜி.எஸ்.டி. வரம்புக்குள் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களை கொண்டு வராததால், அவற்றின் மீது உற்பத்தி வரி, வாட் வரி தொடர்ந்து விதிக்கப்பட்டு வருகிறது. உற்பத்தி வரி உயர்வால், எரிபொருட்கள் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

 விலையை கட்டுப்படுத்த எரிபொருட்களை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.இந்தநிலையில், நாடாளுமன்ற மக்களவையில் நேற்று இதுதொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் எழுத்துமூலம் பதில் அளித்தார். அவர் கூறியதாவது:கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல், விமான எரிபொருள், இயற்கை எரிவாயு போன்றவற்றை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வரும் திட்டம் இப்போதைக்கு இல்லை.

இந்த பொருட்களை எந்த தேதியில் ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வருவது என்று மாநிலங்களும் இடம்பெற்றுள்ள ஜி.எஸ்.டி. கவுன்சில்தான் சிபாரிசு செய்ய வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. இதுவரை, ஜி.எஸ்.டி. கவுன்சில் அப்படி ஒரு சிபாரிசை செய்யவில்லை.

வருவாயில் ஏற்படும் பாதிப்பு உள்ளிட்ட எல்லா அம்சங்களையும் ஆராய்ந்து, ஜி.எஸ்.டி. கவுன்சில் இதுகுறித்து ஒரு முடிவு எடுக்கலாம். அப்படி கொண்டு வந்தால், நாடு முழுவதும் எரிபொருட்கள் மீது ஒரே மாதிரியான வரி விதிப்பு சாத்தியமாகும். என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்