Monday, 13th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

எடப்பாடியை எதிர்த்தால் டெட்பாடி

ஏப்ரல் 09, 2019 05:52

விருதுநகர்: தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.  அப்போது கூறியதாவது கல்லாப் பெட்டி,  பரிசுப் பெட்டியைத்தான்  டிடிவி தினகரன் கேட்கிறார். மக்களுக்குச் சேவை செய்யும் எண்ணம் தினகரனுக்கு துளியும் இல்லை. ஜெயலலிதாவுக்குத் தெரியாமல் ஒரு சதி வலையைப் பின்னுனாங்க. இப்ப அதையெல்லாம் உடைத்தெறிந்து கட்சியையும் ஆட்சியையும் எடப்பாடி நடத்திக்கொண்டிருக்கிறார். 

அந்த நிலைமையெல்லாம் மாறிப்போச்சு. தினகரனுடைய நோக்கம் என்ன தெரியுமா? ஒரு மனிதனுடைய மனதில் என்ன இருக்கிறதோ அதுதான் வார்த்தையாக வெளிவரும். அவர் கஜானாவைத்தான் பார்க்கிறார். தமிழ்நாடு முதலமைச்சர் ஆகிவிட்டால் கஜானாவை எடுத்துக்கொண்டு போய்விடலாமா? கஜானாவில் எவ்வளவு இருக்கிறது? இத்தனை லட்சம் கோடி இருக்கிறதாமே என்று கேட்கிறாராம். இத்தனை லட்சம் கோடியை வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போய் விடுவதா? தூக்கிக்கொண்டு போய்விட முடியுமா? இன்னும் அவருடைய நடவடிக்கை அனைத்தும் பணம், பணம் என்றே இருக்கிறது. மனம் இல்லை; குணம் இல்லை. தினகரன் கட்சி இந்த தேர்தலுக்குப் பிறகு, கழுதை தேய்ந்து கட்டெறும்பானது மாதிரி ஆகிவிடும்.  

எடப்பாடி விவசாயி அல்ல, விஷவாயு என்றா சொல்கிறார் ஸ்டாலின்? எடப்பாடியை எதிர்க்கும் அரசியல் இயக்கங்கள் அனைத்தும் டெட் பாடியாகத்தான் இருக்கின்றன. உயிருள்ள நடமாட்டம் உள்ள கட்சிகளாக எதுவும் இல்லை. எடப்பாடியை எதிர்ப்பதாகச் சொல்லிக்கொண்டு தங்களை டெட்பாடியாக உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதாவது, அரசியல் கட்சிகள்.  பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்கள் அமைச்சர்களாகவோ, சட்டமன்ற உறுப்பினர்களாகவோ, யாராக இருந்தாலும் அவர்களை எடப்பாடி தூக்கி எறிந்துவிடுவார். 

எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்ததைப்  பின்னடைவு என்று சொல்ல முடியாது.  தமிழக அரசு மேல்முறையீடு செய்யக்கூடும்.  தொழிற்துறை வளர்ச்சிக்கு சாலை வசதி மிகவும் அவசியம். அடுத்த கட்டமாக கூட்டணிக் கட்சி தலைவர்களை அழைத்துப் பேசி யாரும் பாதிக்காத அளவிற்கு  முதல்வர்  முடிவெடுப்பார். மோடியை எதிர்த்தவர்கள் லூசு பிடித்து சுற்றி வருகின்றனர். கருத்துக் கணிப்பைத் தாண்டி மக்களின் கணிப்பு உள்ளது. அவர்களின் கணிப்பு அதிமுக தான்.” என்றார்.  
 

தலைப்புச்செய்திகள்