Friday, 10th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

யாதவர்களை புறக்கணித்த திமுக மற்றும் அதிமுக கூட்டணி

ஏப்ரல் 08, 2019 03:36

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கு வருகிற 18.4.2019 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.   
இத்தேர்தலில் போட்டியிட விரும்பிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் விருப்ப மனுக்களை வாங்கிய அதிமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகள், நேர்காணல் என்ற பெயரில் கண்துடைப்பு நாடகம் நடத்தியது. இதையடுத்து திமுக மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகள் படிப்படியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது.   

அதில் இரு கூட்டணி கட்சிகள் சார்பிலும் வாரிசுகளுக்கு சீட் கொடுக்கப்பட்டன. வடதமிழகம், மேற்கு தமிழகம் மற்றும் தென் தமிழகத்தில் பெரும்பான்மையாக இருக்கும் சாதிகளுக்கு வழக்கம்போல இரு கூட்டணி கட்சிகளும் சீட் கொடுத்தன.   

தனித்தொகுதிகள் தவிர மற்ற தொகுதிகளில் வன்னியர், கவுண்டர், முக்குலத்தோர் ஆகிய சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு நிறைய சீட்டுகள் கொடுக்கப்பட்டது. இதில் பெரும்பான்மையான சமூகமாக இருக்கும் யாதவர் சமூகத்துக்கு இரண்டு கட்சிகளும், அதன் கூட்டணி கட்சிகளும் சீட் கொடுக்காமல் புறக்கணித்துவிட்டது.  

ஓ.பன்னீர் செல்வத்திற்கு நெருக்கமாக இருக்கும் கோபாலகிருஷ்ணன் எம்.பி.க்கு மதுரை தொகுதி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கு உள்ளூர் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், மாவட்ட செயலாளர் விவி.ராஜன் செல்லப்பா ஆகியோர் ஆதரவு இல்லை. அதனால், எம்.பி.க்கு வாய்ப்பு வழங்கினாலும் இவர்கள் ஒத்துழைப்பு கோபால கிருஷ்ணனுக்கு கிடைக்குமா என்ற நிலையில் அவருக்கும் சீட் மறுக்கப்பட்டது.  

அதிமுக கூட்டணி சார்பில் சிவகங்கை தொகுதி பாஜக.வுக்கு வழங்கப்பட்டபோது, பாஜக சார்பில் வின்.டிவி.நிறுவனர் தேவநாதன் யாதவுக்கு சீட் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கான முயற்சிகளிலும் அவர் தீவிரமாக இருந்தார். எனினும் கடைசி நேர நிர்பந்தம் காரணமாக அவருக்கும் சீட் வழங்கப்படவில்லை.  

இந்நிலையில் சிவகங்கை தொகுதிக்கு காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது. அந்த தொகுதியில் யாதவர் சமூகத்தை சேர்ந்தவர் நிறுத்தப்படலாம் என்பதால் அதுகுறித்த ஆலோசனையால்தான் தாமதமாகிறது என்றும் கூறப்பட்ட நிலையில் யாதவர் சமூகத்தை சேர்ந்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நிறுத்தப்படுவார் என்று செய்திகள் முதலில் வெளியானது.   

இதனால் அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் உற்சாகமடைந்ததோடு, அந்த தொகுதியில் கே.எஸ்.அழகிரியை வெற்றி பெற செய்ய வேண்டுமென்று பரபரப்பாக பேசினர். ஆனால் திடீரென அந்த தொகுதியில் எண்ணிக்கையில் குறைவாக உள்ள செட்டியார் சமூகத்தை சேர்ந்த கார்த்தி சிதம்பரத்தை காங்கிரஸ் வேட்பாளராக அறிவித்தது.   

அதனால் மிகுந்த கோபமடைந்த யாதவர் சமூகத்தினர், அடுத்தடுத்த தொகுதிகளிலாவது இரண்டு கட்சிகளும் தனது சமுதாயத்தை சேர்ந்த யாருக்காவது ஒரு சீட்டாவது கொடுப்பார்களா என்று எதிர்பார்த்தனர். இந்நிலையில் மத்திய சென்னை தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா நிறுத்தப்படுவார் என்று முதலில் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்த தொகுதி அதிமுகவின்  கூட்டணி கட்சியான பாமகவுக்கு வழங்கப்பட்டது.   

அதையடுத்து யாதவர் சமூகத்தில் அரசியலில் முக்கிய பிரமுகராக கருதப்படும் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று எண்ணியிருந்த நிலையில் அதிலும் ஏமாற்றமே மிஞ்சியது. அதிமுக கூட்டணி சார்பில் ராமநாதபுரம் தொகுதி பாஜகவுக்கு வழங்கப்பட்டது. எனவே அந்த தொகுதியிலாவது வின்.டிவி நிறுவனர் தேவநாதனுக்கு சீட் வழங்கப்படலாம் என மீண்டும் எதிர்பார்த்தனர் அந்த சமூகத்தினர். ஆனால் கடைசி நேர நிர்பந்தம் காரணமாக அவருக்கும் சீட் வழங்கப்படவில்லை.  

இதனால் மிகுந்த ஆத்திரமடைந்த முன்னாள் அமைச்சர் கண்ணப்பன் உடனடியாக அதிமுகவை விட்டு வெளியேறினார். அதையடுத்து அவர் முதலில் தொடங்கிய மக்கள் தமிழ் தேசம் கட்சியின் சார்பாக போட்டியிடலாம் என்றும் பரவலாக பேசப்பட்டது. ஆனால் கண்ணப்பன்  மு.க.ஸ்டாலினை சந்தித்து தனது ஆதரவு திமுகவிற்கு என்று தெரிவித்தார். இருப்பினும் டிடிவி தினகரனின் அமமுகவும், சீமானின் நாம்தமிழர் கட்சியும், கமலின் மக்கள் நீதி மையம் கட்சியும் யாதவர் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு சீட் கொடுத்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.   

இதனால் மிகுந்த மனவேதனையில் உள்ள யாதவர் சமூகத்தினர் தற்போது இரண்டு கட்சிகளுக்கும் தேர்தலில் தகுந்த பதிலடி கொடுக்க காத்திருக்கின்றனர். இந்நிலையில் பல இடங்களில் யாதவர் ஓட்டு யாதவருக்கே என்று கூறி, அங்கு மற்ற கட்சிகளில் சீட் வாங்கி, சுயேட்சையாக நிற்கும் தனது சமுதாய வேட்பாளர்களுக்கே வாக்களிக்க வேண்டும் என்ற மனநிலையில் உள்ளதாக பேசப்படுகிறது.  

தலைப்புச்செய்திகள்