Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இருசக்கர வாகனத்தில் மாற்றுத்திறனாளியை அமரவைத்து ஓட்டிச்சென்ற கலெக்டர்

மார்ச் 04, 2021 12:52

மதுரை: மதுரை ஆனையூர் பகுதியை சேர்ந்தவர் காளிமுத்து. இவரது மனைவி மாரீஸ்வரி. இவர்களது மகன் பழனிகுமார் (வயது 21), மாற்றுத்திறனாளி. அவர் நடக்க முடியாத நிலையில் இருப்பதால் அவரை மாரீஸ்வரி வெளியே அழைத்து செல்லும்போது இடுப்பில் சுமந்து சென்று வந்துள்ளார். மகனை தான் இடுப்பில் சுமந்து சென்று அலைவதால் கடும் சிரமத்திற்கு ஆளாவதாகவும், அதற்காக தனக்கு வாகனம் ஒன்று வழங்குமாறு கடந்த சில தினங்களுக்கு முன்பு கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்திருந்தார்.

 அந்த மனுவை படித்த மதுரை கலெக்டர் அன்பழகன், அவருக்கு அம்மா இருசக்கர வாகன நிதிஉதவி திட்டத்தின் கீழ் வாகனம் வழங்கப்படும் என்று அவரிடம் தெரிவித்துள்ளார். அதற்கு மாரீஸ்வரி, என்னால் பணம் கட்டி வாகனத்தை வாங்க முடியாது என்று கலெக்டரிடம் கூறியுள்ளார். அதை தொடர்ந்து கலெக்டர் தனது சொந்த செலவில் மாற்றுத்திறனாளி இளைஞர் இருசக்கர வாகனத்தில் அமர கூடிய வகையில் இருக்கையுடன் கூடிய பிரத்யேக இருசக்கர வாகனத்தை நேற்று வழங்கினார்.

மேலும் கலெக்டர் அன்பழகன் அந்த வாகனத்தில் மாற்றுத்திறனாளி இளைஞரை அமர வைத்து அவரது கால்களை தனது இடுப்பில் பிடித்தவாறு வெளியே அழைத்து சென்றார். அப்போது மாற்றுத்திறனாளி இளைஞர் வெளிப்படுத்திய மகிழ்ச்சி அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்தது. இதன் மூலம் மாற்றுத்திறனாளி இளைஞரின் தாயாரின் 21 ஆண்டு சுமைக்கு ஓய்வளித்து உதவிய கலெக்டரின் செயலை அங்கிருந்தவர்கள் பாராட்டினார்கள்.

தலைப்புச்செய்திகள்