Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா தடுப்பூசிகளை 50 நாடுகள் கேட்டுள்ளன- ஆளுநர் பேட்டி

பிப்ரவரி 28, 2021 12:17

நாகர்கோவில்:மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி கொடைவிழா கொடியேற்றம் இன்று நடந்தது.இந்த விழாவில் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் விழாவில் தவறாது கலந்து கொள்கிறேன். முன்பு கட்சி பணியில் இருக்கும் போதும் வந்தேன். இப்போது ஆட்சி பணியில் இருக்கும் போதும் வந்துள்ளேன்.

நான் எம்.எல்.ஏ. ஆக வேண்டும் என்று முன்பு நினைத்திருந்தேன். இப்போது அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கும் பணியை பெற்றுள்ளேன். தெலுங்கானாவில் ஆங்கிலத்தில் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டேன். அப்போது தமிழில் பதவி பிரமாணம் செய்ய ஆசைப்பட்டேன். இப்போது அதுவும் நிறைவேறிவிட்டது. புதுச்சேரியில் தமிழில் பதவி பிரமாணம் செய்தது பெருமையாக இருக்கிறது.

கொரோனா பாதிப்பு இன்னும் முழுமையாக விலகவில்லை. எனவே மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். முகக்கவசம், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.பொதுமக்களுக்கான கொரோனா தடுப்பூசி வர உள்ளது. அதனை அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும்.உலகம் முழுவதும் கொரோனா பிடியில் இருக்கும் போது இந்தியா விரைவிலேயே மீண்டு வந்துள்ளது.

இந்தியாவில் மூலைக்கு மூலை கோவில்கள் உள்ளது. சிவன் கோவிலில் வில்வஇலை, விஷ்ணு கோவிலில் துளசி இலைகளால் பூஜை செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.இது நோய் எதிர்ப்பு சக்தி வாய்ந்தது. இதனால் தான் நாம் கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ளோம்.

இது வரை நாம் தடுப்பூசிகளுக்கு வெளி நாடுகளை மட்டுமே நம்பி இருந்தோம். இப்போது கொரோனா தடுப்பூசிகளை நம் நாட்டிலேயே தயாரித்துள்ளோம். அவை இப்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது.நமது நாட்டில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசிகளை கேட்டு 50 நாடுகள் காத்திருக்கின்றன. நமது நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் பாதுகாப்பானவை.என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
 

தலைப்புச்செய்திகள்