Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பெட்ரோல், டீசலை தொடர்ந்து கியாஸ் விலை ரூ.50 உயர்வு

பிப்ரவரி 15, 2021 02:21

புதுடெல்லி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலையில் ஏற்படும் மாற்றத்திற்கு தகுந்தாற்போல இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது.இதில் பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றி அமைக்கிறார்கள். சமையல் கியாசின் விலை 2 வாரத்திற்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்படுகிறது.

அதன்படி இன்று சமையல் கியாஸ் விலையை மாற்றி அமைத்து மத்திய பெட்ரோலிய துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் மானியம் கொண்ட சிலிண்டருக்கு ரூ.50 உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1-ந் தேதி ரூ.50 உயர்த்தப்பட்டது. அதன் பிறகு டிசம்பர் 16-ந் தேதி ரூ.50 உயர்த்தப்பட்டது. இதனால் சிலிண்டர் விலை ரூ.710 ஆக இருந்து வந்தது.

இந்தநிலையில் இந்த மாத தொடக்கத்தில் ரூ.25 உயர்த்தப்பட்டது. இதனால் சிலிண்டர் விலை ரூ.735 ஆக இருந்தது. இப்போது மேலும் ரூ.50 உயர்த்தி இருப்பதால் ஒரு சிலிண்டரின் விலை ரூ.785 ஆக உயர்ந்துள்ளது.பல குடும்பங்களுக்கு கியாஸ் சிலிண்டர்களுக்கு மத்திய அரசு குறிப்பிட்ட மானிய தொகைய வழங்குகிறது. இவ்வாறு வருடத்திற்கு 12 சிலிண்டர்கள் வழங்கப்படும்.

முதலில் முழு தொகையையும் கட்டி சிலிண்டரை பெற்றுக் கொள்ள வேண்டும். அதன்பிறகு அதற்கான மானியத்தொகை வாடிக்கையாளரின் வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைக்கப்படும். ஆனால் கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து மானியத் தொகை வங்கிக் கணக்குக்கு வரவில்லை. சிலருக்கு நீண்ட காலமாகவே மானியத் தொகை வரவில்லை என்று கூறுகின்றனர். இதில் குளறுபடி நிலவி வருகிறது. எண்ணை நிறுவனங்கள் மானிய பணத்தை முறையாக அனுப்புவதில்லை என்று புகார் கூறுகிறார்கள்.

ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சமையல் கியாஸ் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக லாரி மற்றும் சரக்கு வாகனங்களின் வாடகை பல இடங்களில் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் வாடகையை கடுமையாக உயர்த்தப் போவதாக லாரி அதிபர் சங்கங்கள் அறிவித்துள்ளன.

இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. சமையல் கியாசின் விலையும் தொடர்ந்து ஏறுமுகமாக இருப்பதால், ஓட்டல் பண்டங்கள் தயாரிப்புக்கான செலவு அதிகரிக்கும். எனவே ஓட்டல் பண்டங்களின் விலையும் உயர்த்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 

தலைப்புச்செய்திகள்