Monday, 3rd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அய்யா வைகுண்டர் அவதார தினத்தை அரசு பொதுவிடுமுறையாக அறிவிக்க வேண்டும்: தமிழ்நாடு நாடார் சங்கம் கோரிக்கை

பிப்ரவரி 14, 2021 01:25

சென்னை: தமிழகம் முழுவதும் அய்யா வைகுண்டர் அவதார தினத்தை பக்தர்கள் கொண்டாடி மகிழ அன்று அரசு பொதுவிடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று நாடார் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அச்சங்கத்தின் தலைவர் முத்துரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

ஐயா வைகுண்டர் சுவாமியின் 189வது அவதார தினம் மாசி மாதம் 20ம் தேதி, 04.03.2021 அன்று பக்தர்களால் உலகம் முழுவதும் மிக சிறப்பாக கொண்டாட படவுள்ளது. ஜாதி, இன பேதமின்றி மக்களை காப்பதே தர்மம் என்கிற கொள்கை முழக்கத்துடன் சமபந்தி, சமத்துவ குடில், ஒரே கிணற்று தண்ணீரை அனைவரும் பருக செய்வது, பெண்ணுரிமை, சமத்துவம், சகோதரத்துவம் போன்ற பல புரட்சிகளையும் ஆன்மீகம் மூலம் 18ம் நூற்றாண்டில் ஏற்படுத்தியவர் ஐயா வைகுண்டர் சுவாமி.

ஐயா வழி பக்தர்கள் தமிழகம் முழுவதும் 30 லட்சத்திற்கும் மேல் உள்ளனர். ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட ஐயா வழி நிழல் தாங்கள் உலகம் முழுவதும் உள்ளன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா  ஐயா வைகுண்டர் சுவாமியின்  அவதராத்தினத்தை சிறப்பாக கொண்டாடும் வகையில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி உள்ளார்கள்.

தமிழகம் முழுவதும் ஐயாவழி பக்தர்கள், அவர் அவதாரத்தினத்தை கொண்டாடி மகிழும் வகையில், நீண்டநாள் கோரிகையான மாசி மாதம் 20ம் தேதி தமிழக அரசு பொது விடுமுறை வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை கேட்டுக் கொள்கிறோம் என தமிழ்நாடு நாடார் சங்கத்தலைவர் முத்துரமேஷ் கூறியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்