Friday, 10th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

எங்களுக்கு மக்களின் மன வலி என்னவென்று நன்கு தெரியும்: நாம் தமிழர் கட்சி காளியம்மாள்

ஏப்ரல் 06, 2019 07:58

சென்னை: வடசென்னை தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் காளியம்மாள், விவசாயி சின்னத்தில் போட்டியிடுகிறார். பழைய வண்ணாரப்பேட்டை, எம்.சி.ரோடு, ராயபுரம் ஆகிய பகுதிகளில் கட்சியினருடன் சேர்ந்து வேட்பாளர் காளியம்மாள் வாக்குகளைச் சேகரித்தார்.  

அப்போது அப்பகுதியில் வசிக்கும் மக்களிடம் சென்று அவர்களுக்கு பிரச்சனைகளை கேட்டறிந்தார். அப்போது ஆர்.கே.நகர் தொகுதியிலும் ராயபுரம் தொகுதியிலும் குடிநீரோடு கழிவுநீர், பெட்ரோல் கலப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். அதைகேட்ட காளியம்மாள் மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும். குடிநீரில் எப்படி கழிவு நீர் கலக்கிறது என்பதை ஆய்வுசெய்து அதற்கு உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன். நாம் தமிழர் கட்சி மனிதர்களுக்காக மட்டும் அரசியல் பண்ணவில்லை. அனைத்து உயிரினங்களுக்காகவும் அரசியல் பண்ணுகிறோம். 

இந்த தொகுதியை பொறுத்தவரை நான் தீர்க்கும் முதல் பிரச்சனையே வடசென்னை மக்களுக்கு சுத்தமான, சுகாதாரமான குடிநீர் வழங்கப்பட செய்வதுதான். என்னைப் போல ஏழை நடுத்தர மக்கள்தான் அதிகளவில் தமிழகத்தில் வாழ்கின்றனர். எங்களுக்கு மக்களின் மன வலி என்னவென்று நன்கு தெரியும் என்று கூறினார். 

மேலும் நாங்கள் செல்லும் இடங்களில் எங்களுக்கு எந்த எதிர்ப்பும் இல்லை. அதைவைத்தே நன்கு தெரிகிறது மக்கள் மாற்று அரசியலை விரும்பிகிறார்கள் என்று. ராயபுரம் தொகுதி மீனவர்கள் அதிகம் வாழும் பகுதி. மீனவர்கள் பிரச்னைகளுக்கு குரல் கொடுப்பேன். துறைமுகம் சார்ந்த பிரச்னைகள், மீனவர்களை வேறு இடத்தில் குடியமர்வு பிரச்னை என அனைத்துப் பிரச்னைகளுக்கும் குரல் கொடுப்பதோடு,எங்களிடம் குழந்தைகளுக்கான கல்வி முதல் முதியோருக்கான உதவித் தொகை வரையிலான திட்டமும் உள்ளது. இதனால் வடசென்னைபகுதியில் கண்டிப்பாக வெற்றிபெறுவேன் என்ற நம்பிக்கையும் உள்ளது என்று கூறினார். 

அதையடுத்து 52 வது வார்டு சிங்காரத்தோட்டம், 5 -வது தெருவில் வாக்குசேகரித்தபோது, அங்கு கழிவுநீர் நீண்ட நாள்களாக தேங்கி நிற்பதாக அப்பகுதி மக்கள் வேட்பாளரிடம் கூறினர். உடனடியாக விவரத்தைக் கேட்டறிந்த அவர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு, இந்தப்பகுதியில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் தொற்று நோய் பரவ வாய்ப்புள்ளது. உடனடியாக அதை அகற்ற நடவடிக்கை எடுங்கள். நான், வேண்டும் என்றால் எழுத்துபூர்வமாக நாளை காலை உங்களுக்கு புகார் கொடுக்கிறேன் என்று கூறியதையடுத்து, அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.  

வரிசையான வாகன அணிவகுப்பு, ஆரவாரம் இல்லாமல் வடசென்னையின் நாம் தமிழர் வேட்பாளர் செய்யும் பிரசாரத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவே தெரிகிறது.

தலைப்புச்செய்திகள்