Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மன்னர் பரம்பரையா, மக்கள் பிரதிநிதியா?

ஏப்ரல் 06, 2019 06:36

உத்தரகண்ட்: உத்தரகண்ட் மாநிலத்தின் முக்கிய தொகுதி, தெஹ்ரி கர்வால். ஏழு ஆண்டுகளுக்கு பின், அதை மீண்டும் கைப்பற்ற, காங்கிரஸ் வியூகம் வகுத்துள்ளது.உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள, ஐந்து லோக்சபா தொகுதிகளுக்கு, வரும், 11ல் தேர்தல் நடக்கிறது. இதில், 14 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கிய முக்கிய தொகுதியாக, தெஹ்ரி கர்வால் உள்ளது.இங்கு நடந்த லோக்சபா தேர்தலில், 10 முறை காங்கிரஸ் வென்றுள்ளது.  

கர்வால் அரச பரம்பரையின் கடைசி மன்னராக கருதப்பட்ட, மன்வேந்த்ர ஷா, லோக்சபா தேர்தலில் இங்கு, எட்டு முறை வெற்றி பெற்றுள்ளார்.காங்கிரஸ் சார்பில், மன்வேந்த்ர ஷா, மூன்று முறை; பா.ஜ., சார்பில், ஐந்து முறை வெற்றி பெற்றுள்ளார். 85 வயதில், எம்.பி.,யாக இருக்கும் போதே, மன்வேந்த்ர ஷா மறைந்தார்.அதனால், 2007ல் நடந்த லோக்சபா இடைத் தேர்தலில், காங்., சார்பில் போட்டியிட்ட, உத்தரகண்ட் முன்னாள் முதல்வர், விஜய் பகுகுணா வெற்றி பெற்றார். 2009 தேர்தலிலும், அவரே வெற்றி பெற்றார். 2012ல் உத்தர கண்ட் முதல்வராக, விஜய் பகுகுணா பதவி ஏற்றார்.முன்னதாக, எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார். 

இதையடுத்து, 2012ல் இடைத் தேர்தலிலும், 2014 லோக்சபா தேர்தலிலும், மன்னர் மன்வேந்த்ர ஷாவின் மகள், மாலா ராஜ்ய லட்சுமி, பா.ஜ., சார்பில் போட்டி யிட்டு வெற்றி பெற்றார். இந்த தேர்தலி லும், பா.ஜ., சார்பில், மீண்டும் மாலாவே போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக, காங்., - எம்.எல்.ஏ., பிரீத்தம் சிங் போட்டியிடுகிறார். இவர், உத்தரகாண்டில், நான்கு முறை, உத்தரபிரதேசத்தில் எட்டு முறை, எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்ட வழக்கறிஞர் ஆவார்.இவர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. 

மன்னர் பரம்பரையிடம் இருந்து, 2007ல் லோக்சபா தொகுதியை மீட்டது போல், இந்த முறையும் மீட்டெடுக்க, காங்., சபதம் எடுத்துள்ளது. தொகுதியை இனி விட்டு விடக் கூடாது என, பா.ஜ., களத்தில் குதித்துள்ளது.பா.ஜ., தலைவர், அமித் ஷா, தன் பிரசாரத்தில், 'பாகிஸ்தான் பிரதமரின் முகமும், ராகுலின் முகமும் ஒரே போன்று இருக்கிறது. காங்கிரசை ஒரு போதும் நாட்டை ஆள விடக் கூடாது. விட்டால், நாட்டின் பாதுகாப்பு பறிபோய் விடும்' என, கூறியுள்ளார். 

காங்கிரஸ் தரப்பு பிரசாரத்தில், 'தொகுதியின் பின்தங்கிய நிலைமைக்கு காரணம், பல ஆண்டுகளாக, பா.ஜ., - எம்.பி.,க்கள், மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. எனவே, அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்த, காங்கிரஸை ஆதரியுங்கள். மன்னர் பரம்பரையை விட, மக்கள் பிரதிநிதியானவரை தேர்வு செய்யுங்கள்' என, கூறி வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்