Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பனிமலை உருகியதால் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு - அதிகமானோர் பலி

பிப்ரவரி 07, 2021 11:36

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம் சாமோலி மாவட்டம் ஜோஷிமாத் பகுதியில் உள்ள பனிமலை இன்று திடீரென உடைந்துள்ளது. ரிஷிகங்கா மின்நிலையம் அருகே பெரிய அளவில் பனிப்பாறைகள் சரிந்து, வேகமாக உருகின. இதனால் தவுலிகங்கா நதியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நேரம் செல்லச் செல்ல ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்துகொண்டே சென்றது.

இதையடுத்து கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பொதுமக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டது. ஆற்றங்கரையோர பகுதிகளில் வசித்து வரும் மக்களை உடனடியாக வெளியேற்றும்படி மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார். ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பு பணி நடைபெறுகிறது.

வெள்ளப்பெருக்கு காரணமாக ரிஷிகேஷில் படகு பயணம் நிறுத்தப்பட்டது. ஹரித்வாரில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஆற்றங்கரையோரத்தில் உள்ள பல்வேறு வீடுகள் அடித்துச் செல்லப்பட்டதாகவும், 100க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. 

இதற்கிடையே வெள்ளப்பெருக்கு தொடர்பாக பல்வேறு வதந்திகளும் வெளியாகின்றன, அவற்றை நம்ப வேண்டாம் என முதல்வர் திரிவேந்தர் சிங் ராவத் கேட்டுக்கொண்டுள்ளார். பாதிக்கப்பட்ட பகுதியில் யாராவது இருந்தால் அவர்கள், 1070 அல்லது 9557444486 என்ற எண்களில் தொடர்பு கொண்டு உதவி கேட்கலாம் என்றும் அவர் கூறி உள்ளார்.

தலைப்புச்செய்திகள்