Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கோவில் திறப்பு

ஜனவரி 30, 2021 11:43

மதுரை: தமிழக வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். இவரது ஏற்பாட்டில் ஜெயலலிதா பேரவை மற்றும் அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட டி.குன்னத்தூரில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கோவில் கட்டப்பட்டுள்ளது.

சுமார் 12 ஏக்கர் நிலபரப்பில் முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் 7 அடி உயர முழு உருவ வெண்கலச்சிலைகள் நிறுவப்பட்டுள்ளது. ஒவ்வொரு சிலையும் 400 கிலோ எடை கொண்டதாகும்.

இந்த சிலைகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடந்த 14-ந்தேதி பிரதிஷ்டை செய்தார். இதைத்தொடர்ந்து தினமும் பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. ஆர்.பி.உதயகுமார் மற்றும் அவரது குடும்பத்தினர், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் விரதம் இருந்து தினமும் இதற்கான கும்பாபிஷேக பணிகளை கவனித்து வந்தனர்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா திருக்கோவில் திறப்பு விழா இன்று காலை நடந்தது. முன்னதாக கடந்த 2 நாட்களாக யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டன. திருக்கோவிலை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்து வைத்தனர். பின்னர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு நடைபெற்ற கும்பாபிஷேக நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வணங்கினர்.

இதையடுத்து அங்கு அமைக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு பயிற்சி மையம், கலையரங்கம் ஆகியவற்றையும் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். பின்னர் நடைபெற்ற பூஜையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு 120 பசுகளை தானமாக வழங்கினர்.

இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் நலிவுற்ற அ.தி.மு.க. தொண்டர் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு அவருக்கு சால்வை மற்றும் பொற்கிழிகளை எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

விழாவில் ஏராளமான ஏழை-எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த விழா மேடையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பேசினர். விழாவில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்