Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பள்ளத்தில் புராதனச் சின்னங்கள்: மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

ஜனவரி 30, 2021 11:39

சென்னை: சாலைகளைத் தோண்டாமல் போடுவதால் உயரம் அதிகரித்து புராதனச் சின்னங்கள் பாதிக்கப்படுகின்றன. பழைய சாலையைத் தோண்டி எடுத்த பிறகே, புதிய சாலையை அமைக்க வேண்டும் என உத்தரவிடக் கோரிய வழக்கில் மத்திய - மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை நீலாங்கரையைச் சேர்ந்த டாக்டர் எஸ்.ஆர்.எஸ்.சரவணன் தாக்கல் செய்த மனுவில், தமிழகம் முழுவதும் சாலைகள் புதிதாக அமைக்கப்பட்டுவரும் நிலையில், பழைய சாலைகளைத் தோண்டி எடுக்கமால் புதிய சாலைகள் அமைக்கப்படுவதால், பழைய சாலையின் உயரம் உயர்ந்து, நினைவுச் சின்னங்கள், புராதனச் சின்னங்கள், புராதன கோயில் ஆகியவை சாலையைவிடத் தாழ்வான பகுதிக்குச் சென்றுவிடுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகம் அருகே போர் நினைவுச் சின்னம், சென்ட்ரல் அருகே விக்டோரியா ஹால், எழும்பூர் அருங்காட்சியகம் ஆகியவை ஆதாரமாக இருப்பதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால், பழைய சாலையைத் தோண்டி எடுத்த பிறகே புதிய சாலையை அமைக்கத் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு, மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி, மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு, விசாரணையைத் தள்ளிவைத்தது.

தலைப்புச்செய்திகள்