Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழக அரசின் 47-வது தலைமை செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமனம்

ஜனவரி 28, 2021 10:29

சென்னை: தமிழக அரசின் 47-வது தலைமை செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான தமிழக அரசின் உத்தரவு ஓரிரு நாட்களில் பிறப்பிக்கப்பட உள்ளது.

தமிழக அரசில் இதுவரை 46 தலைமை செயலாளர்கள் பணிபுரிந்துள்ளனர். தற்போது தலைமை செயலாளராக பணியாற்றும் க.சண்முகம் இந்த மாத இறுதியில் ஓய்வுபெறுகிறார்.

இந்தநிலையில் அவருக்கு பதிலாக புதிய தலைமை செயலாளராக தற்போது மத்திய அரசு பணியில் மீன்வள, கால்நடை மற்றும் பால்வள அமைச்சக செயலாளராக பணியாற்றும் ராஜீவ் ரஞ்சன் நியமிக்கப்பட்டு உள்ளார். அவரை தமிழக அரசு பணிக்கு அனுப்புமாறு, தமிழக அரசு விடுத்த வேண்டுகோளை ஏற்று, அவரை மத்திய அரசு பணியில் இருந்து விடுவித்து, கேபினட் நியமனக்குழு உத்தரவிட்டுள்ளது.

ராஜீவ் ரஞ்சன் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர். 22-&9&1961-ல் பிறந்த அவர், எம்.எஸ்.சி., எம்.பி.ஏ. பட்டங்களை பெற்றுள்ளார். இதுதவிர அறிவுசார் சொத்துரிமையில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். தமிழக அரசின் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருந்த ராஜீவ் ரஞ்சன், தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருத மொழிகளில் நல்ல புலமை மிக்கவர்.

அவருக்கு, வருகிற செப்டம்பர் மாதம் வரை பதவிக்காலம் இருக்கிறது. மத்திய அரசாங்கத்தின், சரக்கு சேவை வரி (ஜி.எஸ்.டி.) கவுன்சிலில் சிறப்பு செயலாளராக பணியாற்றியவர். இவர் சிறந்த நிர்வாகத்திறமை பெற்றவர். ராஜீவ் ரஞ்சனை தமிழக அரசின் தலைமை செயலாளராக நியமிக்கும் உத்தரவு விரைவில் வெளியிடப்படும் என்று தெரிகிறது.
 

தலைப்புச்செய்திகள்