Friday, 10th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அதிமுகவினர் களப்பணியாற்றினால் தான் தமிழிசை வெல்ல முடியும்!

ஏப்ரல் 05, 2019 06:20

தூத்துக்குடி: தூத்துக்குடி தொகுதியில் திமுக மற்றும் அதிமுக கூட்டணி கட்சியினர் தீவிரமாக களப்பணியாற்றுகிறார்கள். திமுக வேட்பாளராக போட்டியிடும் கனிமொழிக்கு எதிராக தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்திர ராஜன் போட்டியிடுகிறார். 
                                  
பாரத தேசத்தின் தென்கோடி முனையான குமரி மண்ணில் பிறந்து,இன்று பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவராக பதவி வகித்து வருபவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன். படித்த பெண்கள் அரசியலை  அன்னாந்து பார்த்திருந்த காலத்தில், மருத்துவம் படித்துவிட்டு அரசியலுக்கு வந்தவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன். 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் கடந்த 1961 ஆம் ஆண்டு ஜீன் 2 ஆம் தேதி  தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்  குமரி அனந்தன் -கிருஷ்ணகுமரி ஆகியோரின்  மகளாக பிறந்தவர் தமிழிசை. சென்னை  மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படித்து முடித்த தமிழிசை, எம்.ஜி.ஆர் மருத்துவக் கல்லூரியில் டி.ஜி.ஓ படித்தவர். சென்னை ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரியில் 5 ஆண்டு காலம் உதவி பேராசிரியராக பணியாற்றிய தமிழிசை, முழுநேர அரசியலில் ஈடுபடுவதற்காக தமது மருத்துவப் பணியை ராஜினாமா செய்தார். இவரது கணவர் சவுந்தரராஜனும் தொழில்முறை மருத்துவர். பாரதம் காக்கும் பாரதிய ஜனதா கட்சியில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி, படிப்படியாக முன்னேறி கட்சியின் மாநில தலைமை பதவியை அடைந்தவர் தமிழிசை சவுந்திரராஜன். 

இவர்  கடந்த 1999 ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை பாஜகவின் தென்சென்னை மாவட்ட மருத்துவ அணி செயலாளராக பொறுப்பு வகித்தவர். பின்னர் 2001 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை தமிழக பாஜக மருத்துவ அணியின் பொதுச்செயலாளராக பொறுப்பு வகித்த தமிழிசை  சவுந்திரராஜன்,3 மாவட்டங்கள் அடங்கிய மண்டலத்துக்கு இன்று வரை பொறுப்பாளராக நீடிக்கிறார். 2005 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை மருத்துவ அணியின் தென் மாநிலங்களுக்கான தேசிய இணை ஒருங்கிணைப்பாளராக பதவி வகித்தார். தொடர்ந்து மருத்துவ அணியில் பல்வேறு பொறுப்புகளை அலங்கரித்த தமிழிசை சவுந்திரராஜனின் கட்சிப்பணியை அங்கீகரிக்கும் வகையில் தமிழக பாஜகவின் பொதுச்செயலாளர் பதவியை அவருக்கு வழங்கியது கட்சியின் தேசிய தலைமை. 

2007 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை தமிழக பாஜக பொதுச்செயலாளராக செயல்பட்ட தமிழிசை சவுந்திரராஜன் கட்சியை வளர்க்கும் பணிகளில் அதிகமாக ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை தமிழக பாஜகவின் துணை தலைவராக தமிழிசை சவுந்திரராஜன் நியமிக்கப்பட்டார். 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க பாஜக தயாரானபோது, தமிழக பாஜக தலைவராக தமிழிசை சவுந்திரராஜன் நியமிக்கப்பட்டார்.  

அன்று முதல் தமிழக பாஜக தலைவர் பதவியில் தமிழிசை சவுந்திரராஜன் நீடிக்கிறார். தமிழகத்தின் சுஷ்மாஜி என்றழைக்கப்படும் தமிழிசை சவுந்திரராஜன்,சமூக நலப்பணிகளிலும் ஆர்வம் மிகுந்தவர்.பெண்கள் மற்றும் குழந்தைகளின் முன்னேற்றத்துக்காக பெண்சக்தி இயக்கத்தை தொடங்கிய தமிழிசை சவுந்திர ராஜன், பல்வேறு பகுதிகளில் 200 க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்களை ஏழைகளுக்காக நடத்தியுள்ளார்.தமிழகத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு சுனாமி தாக்கிய பகுதிகளில் ஏராளமான மருத்துவ முகாம்களை நடத்தி,பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறியவர் தமிழிசை சவுந்திரராஜன்.  

காவிரி விவகாரம் உள்ளிட்ட தமிழகத்தின் உரிமைகள் சார்ந்த பிரச்சனைகள் மற்றும் பொதுமக்கள் பிரச்சனைகளுக்காக போராட்டங்கள் நடத்தி 100க்கும் மேற்பட்ட முறை காவல்துறையால் கைது செய்யப்பட்டவர் தமிழிசை சவுந்திரராஜன். தமிழ் மற்றும் ஆங்கில ஊடகங்களில் பாஜக சார்பில் பங்கேற்று,கட்சியின் கருத்துகளை செம்மையாக எடுத்துரைத்த தமிழிசை சவுந்திரராஜன்,இன்றுவரை ஊடகத்தினர் எளிதில் தொடர்புகொள்ளும் தலைவராக திகழ்கிறார்.  

தற்போதைய குடியரசு துணை தலைவர் வெங்கையாநாயுடு, பாஜக மூத்த தலைவர் எல்,கே.அத்வானி, மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட தலைவர்கள் தமிழகத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய போது அவர்களின் ஆங்கிலப் பேச்சுகளை தமிழில் எளிமையாக மொழி பெயர்த்தவர் தமிழிசை சவுந்திரராஜன். இவரது அரசியல் மற்றும் சமூகசேவையை பாராட்டி பல்வேறு அமைப்புகள் விருதுகள் வழங்கினாலும், அமெரிக்காவில் பிரபலமான பன்னாட்டு கலாச்சார ஒருங்கிணைப்பு சான்றோர்கள் மையம் சார்பில் தமிழிசை சவுந்திரராஜனுக்கு சர்வதேச வளர்ந்து வரும் நட்சத்திரம் என்ற விருது வழங்கப்பட்டது. 

கடந்த 2018 ஆம் ஆண்டு அமெரிக்காவில் இலினாய்ஸ் மாகாணத்தில் நடைபெற்ற விழாவில் இந்தியாவில் இருந்து பங்கேற்று விருதுபெற்ற ஒரே அரசியல் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் என்பது பெருமைக்குரியது. அனைத்து வகையான விமர்சனங்களையும் அசராமல் எதிர்கொள்ளும் ஆற்றல் மிக்க தமிழிசை சவுந்திரராஜன், அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களிடமும் நாகரிகத்துடனும்,நட்புடனும் பழகும் பண்புடையவர். 

இவர், தமிழகத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ராதாபுரம் தொகுதியிலும், 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வேளச்சேரி தொகுதியிலும் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தவர். இதேபோல் கடந்த 2009 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வடசென்னை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை நழுவவிட்டவர்.  

வெற்றி தோல்வி பாராமல் பாரதிய ஜனதா கட்சிக்காக தொடர்ந்து உழைத்துவரும் தமிழிசை சவுந்திரராஜன், இம்முறை நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார்.மீண்டும் மோடி, வேண்டும் மோடி என்ற முழக்கத்தை முன்னிறுத்தி மக்களை சந்திக்கிறார். 

தூத்துக்குடி மக்களோடு மக்களாக களத்தில் வாக்கு சேகரிக்கும் தமிழிசை சவுந்திர ராஜன், வெற்றிக்கனியை பறிக்க போராடுகிறார். மக்களை நம்பி உழைக் கிறார். தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் பாஜகவுக்கு என்று தனி வாக்கு வங்கி கிடையாது. அதிமுகவுக்கும் , திமுகவுக்கும் வெற்றி வாய்ப்பை வழங்கிய மக்கள் இப்போது தாமரையா? சூரியனா? என்பதை தேர்ந்தெடுக்க தயாராகி வருகின்றனர். 

வீதி வீதியாக வாக்கு சேகரிக்கும் தமிழிசைக்கு பெண்கள் மத்தியில் தனி செல்வாக்கு அதிகரித்துள்ளது. அதிமுகவினர் முழுமையான வாக்குகளையும், ஒத்துழைப்பையும் நம்பி இறங்கியுள்ள தமிழிசை , அனைத்து கூட்டணி கட்சியினரையைும் அனுசரித்து, அவர்களின் ஆலோசனையை கேட்டு வருகிறார். மொத்தத்தில் அதிமுகவினர் வாக்குகள் மட்டுமின்றி சமத்துவ மக்கள் கட்சி,புதிய தமிழகம் கட்சி, தேமுதிக உள்ளிட்ட கூட்டணி கட்சியினரின் வாக்குகளை நம்பி தமிழிசை களமாடுகிறார். கூட்டணி கட்சியினர் கை கொடுத்தால் மட்டுமே தமிழிசையால் கரையேற முடியும். மொத்தத்தில்  அதிமுகவினர் தீவிரமாக களப் பணியாற்றினால் மட்டுமே தமிழிசை கரையேற முடியும்.

தலைப்புச்செய்திகள்