Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மின்கசிவால் குடிசைவீடுகள் நாசம்

ஜனவரி 23, 2021 09:49

திருவள்ளூர் : மின்கசிவு காரணமாக  வீட்டிலிருந்த சமையல் சிலிண்டர் வெடித்ததால் ஐந்து குடிசை வீடுகள் எரிந்து நாசமாகின. திருவள்ளூர் நகராட்சி அம்சா நகர் 1வது தெருவை சேர்ந்தவர் வேலு. இவர் வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட குடிசை வீட்டில் எதிர்பாராத மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.

அப்போது அவர் வீட்டில் இருந்த துணிமணிகள், சாமான்கள், டிவி, கட்டில், பீரோ போன்றவை தீயில் எரிந்து நாசமானது. இதை கண்ட அக்கம் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் தீ பலமாக எரிந்ததால் அவர்களால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.

அப்போது வேலு வீட்டில் இருந்த சிலிண்டர் வெடித்து சுமார் 15 அடிக்கு உயரத்திற்கு  மேலே பறந்து விழுந்தது.  மேலும் தீயானது அவரது வீட்டில் அருகில் உள்ள அவரது சகோதரர் வீடான பொன்னுரங்கம் வீட்டிலும், அவரது பக்கத்து வீட்டில் இருந்த ரங்கநாதன் சரவணன்  அம்சா  ஆகியோரது வீடுகளிலும்  தீ மளமளவென பரவியது.

இதைக்கண்ட வீட்டில்  இருந்தவர்கள் வெளியே ஓடிவந்து  திருவள்ளூரில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கும், தகவல் தெரிவித்தனர். இதனை அறிந்த திருவள்ளூர் தீயணைப்பு நிலைய அலுவலர் இளங்கோவன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயினை கட்டுப்படுத்த முயற்சி செய்தனர்.

தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். இருப்பினும் மேற்கண்ட 5 குடிசை வீடுகளும் முழுவதுமாக எரிந்து அங்கிருந்த பொருட்கள் மற்றும் வீட்டின்  வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நான்கு சைக்கிள்கள், இரண்டு தையல் இயந்திரம் மேலும் ஆதார் கார்டு, ரேசன் கார்டு போன்றவையும் தீயில் கருகியது.

தீவிபத்தினால் 5 குடிசை வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமானது கண்டு கதறி அழுத சம்பவம் பார்ப்பவர்கள் நெஞ்சினை உருக்குவதாக இருந்தது.

தலைப்புச்செய்திகள்