Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோவிஷீல்டு 1.5 லட்சம் கொரோனா தடுப்பூசி பூடானுக்கு அனுப்பபட்டது

ஜனவரி 20, 2021 01:16

மும்பை :பூடான் நாட்டிற்கு முதல்கட்டமாக 1.5 லட்சம் கோவிஷீல்டு டோஸ் கொரோனா தடுப்பு மருந்து இன்று மும்பையில் இருந்து விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. கொரோனா வைரஸ்தடுப்பூசி தயாரிக்கும் பணிகள், பல்வேறு நாடுகளில் தீவிரப்படுத்தப்பட்டன.

இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் தயாரித்த ‘கோவிஷீல்டு’, ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கிய ‘கோவேக்ஸின்’ ஆகிய தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.

இதையடுத்து, தமிழகம் உட்படநாடு முழுவதும் 2 கட்டங்களாக கரோனா தடுப்பூசி போடும் பணிக்கான ஒத்திகை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜனவரி 16-ம் தேதி அன்று பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. நாடு தழுவிய மிகப்பெரிய கோவிட்-19 தடுப்பு மருந்து வழங்கல் திட்டத்தின் நான்காம் நாளில் 1,77,368 பயனாளிகளுக்கு தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது.

தடுப்பு மருந்து பெற்றுக்கொண்டவர்களில் சிறிய அளவிலான உபாதைகள் ஏற்பட்டவர்களில் ஒன்பது பேருக்கு மட்டுமே மருத்துவமனை அனுமதி தேவைப்பட்டது. தில்லியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர்களில் மூன்று பேர் வீடு திரும்பியுள்ளனர், ஒருவர் கண்காணிப்பில் உள்ளார்.

முதல்கட்டமாக 3 கோடி முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 3,006 மையங்களில் தடுப்பூசி போடும் பணிகள் அடுத்த சில மாதங்களுக்கு தொடர்ந்து நடக்கும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்தியாவின் அண்டை நாடுகளுக்கும் கரோனா தடுப்பு மருந்து வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார். அதன்படி பூடான் நாட்டிற்கு முதல்கட்டமாக 1.5 லட்சம் கோவிஷீல்டு டோஸ் கரோனா தடுப்பு மருந்து இன்று விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. மும்பை விமான நிலையத்தில் இருந்து இந்த மருந்து பொருட்கள் அனுப்பப்பட்டன.

தலைப்புச்செய்திகள்