Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நீட் தேர்வு முறைகேடு - தேடப்பட்ட இடைத்தரகர் ரசீது நீதிமன்றத்தில் சரண் 

ஜனவரி 08, 2021 09:08

தேனி : நீட் தேர்வு முறைகேடு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான கேரளாவைச் சேர்ந்த இடைத்தரகர் ரசீது என்பவர் தேனி மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்தார். கடந்த 2019ஆம் ஆண்டு மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதாக தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த மாணவன் உதித்  சூர்யா என்பவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இதனையடுத்து நடைபெற்ற விசாரணையில் முறைகேடு உறுதி செய்யப்பட்ட நிலையில், மாணவர் உதித் சூர்யா மற்றும் அவரது தந்தை மருத்துவர்  வெங்கடேசன் ஆகியோர்  காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. 


இந்நிலையில் சென்னை, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் அவரது பெற்றோர்  என 14 பேர் கைது செய்து வழக்கு பதிவு  செய்யப்பட்டு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.  பின்னர் நீதிமன்ற காவலுக்கு பின் ஜாமீன் பெற்று குற்றம் சம்பந்தப்பட்ட நபர்கள் வெளி வந்துள்ளனர்.

மேலும் இந்த  வழக்கில் முக்கிய குற்றவாளியாக  சிபிசிஐடி போலீசாரால் கேரளாவைச் சேர்ந்த  இடைத்தரகர் ரசீது என்பவர் தேடப்பட்டு வந்த நிலையில் ஓராண்டுக்கு மேலாக இடைத்தரகர் ரசீது கைது செய்யப்படாத  நிலையில் இன்று தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி பன்னீர்செல்வம் முன்னிலையில் சரண் அடைந்தார். 

இதனை தொடர்ந்து நீதிபதி அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இந்நிலையில் வழக்கு விசாரணையை நடத்தி வரும் சிபிசிஐடி காவல்துறையினர் ஆஜரான ரசீதை காவலில் எடுத்து  விசாரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஆனால் நீதிபதி காவல்துறையினரின் கஸ்டடி மனுவை ஏற்க மறுத்ததை தொடர்ந்து ஆஜரான ரசீதை காவல்துறையினர் பெரியகுளம் கிளை சிறையில் அடைக்க அழைத்துச் சென்றனர்.

தலைப்புச்செய்திகள்