Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வேளாண் சட்டதுக்கு எதிராக விவசாயிகள் டிராக்டர் பேரணி ஒத்திகை 

ஜனவரி 07, 2021 11:19

புதுடெல்லி: மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தி டெல்லி எல்லைகளில் விவசாயிகள் போராடி வருகின்றனர். கடும் குளிர், மழைக்கு மத்தியில் விவசாயிகள் நடத்தி வரும் இந்த முற்றுகைப் போராட்டம் இன்று 43-வது நாளாக நீடிக்கிறது.  

அவர்களுடன் மத்திய அரசு இதுவரை 8 சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தி உள்ளது. ஆனால் இதுவரை எந்த தீர்வும் எட்டப்படவில்லை. அடுத்ததாக நாளை (8-ந் தேதி) மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதற்கிடையே வேளாண் சட்டங்களை திரும்ப பெறப்போவதில்லை என்ற நிலைப்பாட்டில் மத்திய அரசு தொடர்ந்து பிடிவாதமாக இருப்பதால், விவசாயிகள் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தி உள்ளனர்.

அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படாவிட்டால், 26-ந் தேதி குடியரசு தினத்தன்று டெல்லி ராஜபாதையில் டிராக்டர் அணிவகுப்பை பிரமாண்டமாக நடத்தப் போவதாக அறிவித்து உள்ளனர்.இந்த போராட்டத்துக்கான ஒத்திகை நிகழ்ச்சியை இன்று காலை தொடங்கினர். டெல்லியில் உள்ள கிழக்கு மற்றும் மேற்கு எக்ஸ்பிரஸ் சாலையில் இந்த அணிவகுப்பு ஒத்திகை நடைபெறுகிறது. முதலில் காசிபூர் எல்லையில் டிராக்டர் பேரணியை தொடங்கினர்.  

மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்றைய டிராக்டர் பேரணி ஒத்திகை நடைபெறுகிறது. குடியரசு தினத்தன்று தடையை மீறி மிகப்பெரிய அளவில் பேரணி நடத்தினால், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படலாம். எனவே, நாளை நடைபெறும் பேச்சுவார்த்தையில் முக்கிய உடன்பாடு எட்டப்படவேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

டெல்லி எல்லைகளில் நடைபெறும் டிராக்டர் பேரணி ஒத்திகை காரணமாக, குண்ட்லி-மானேசர்-பல்வால் நெடுஞ்சாலை, கிழக்கு புற அதிவேக நெடுஞ்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலை-9 ஆகியவற்றில் போக்குவரத்து பாதிக்கப்படலாம். இதனால் முன்னெச்சரிக்கையாக அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போராட்டம் நடைபெறும் பகுதிகளில் போக்குவரத்தில் மாற்றம்  செய்யப்பட்டுள்ளது. 
 

தலைப்புச்செய்திகள்