Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பள்ளி செல்லும் பெண் குழந்தைகளுக்கு தினமும் ஊக்கத்தொகை

ஜனவரி 05, 2021 01:38

குவாஹாட்டி: பள்ளி செல்லும் பெண் குழந்தைகளுக்கு ஒவ்வொரு நாளும் 100 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அசாம் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பெண் குழந்தைகள் கல்வி கற்பதை ஊக்குவிக்கும் விதமாக இந்த முன்னெடுப்பு தொடங்கப்பட உள்ளது.

இதுகுறித்து அசாம் மாநிலக் கல்வித்துறை அமைச்சர் ஹிமாந்த பிஸ்வா சர்மா நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது, ''மாநிலத்தில் பள்ளி செல்லும் பெண் குழந்தைகளுக்கு, அவர்கள் வகுப்புகளில் கலந்துகொள்ளும் ஒவ்வொரு நாளுக்கும் 100 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும். 

இந்தத் திட்டம் ஜனவரி மாதத்தின் கடைசியில் தொடங்கப்பட உள்ளது.பிரக்யான் பாரதி திட்டத்தின்கீழ் அதிக மதிப்பெண்கள் பெறும் 12-ம் வகுப்பு மாணவிகளுக்கு இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை 22 ஆயிரம் வாகனங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதற்காக அரசு ரூ.144.3 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. 2018 மற்றும் 2019ஆம் ஆண்டில் 12-ம் வகுப்பை முடித்த மாணவிகளுக்கும் இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும்.

கல்லூரி மாணவர்களுக்கு உதவித்தொகை மேலும் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள் அனைவருக்கும் புத்தகங்கள் மற்றும் பிற கற்றல் உபகரணங்களை வாங்க முறையே ரூ.1,500 மற்றும் ரூ.2,000 தொகை அரசால் வழங்கப்படும். இத்தொகை மணவர்களின் வங்கிக் கணக்குகளுக்கே நேரடியாக அனுப்பப்படும். இத்திட்டங்களைக் கடந்த ஆண்டே செயல்படுத்தத் திட்டமிட்டிருந்தோம்.

கொரோனா பெருந்தொற்றால் தள்ளிப் போய் விட்டது'' என்று அமைச்சர் ஹிமாந்த பிஸ்வா சர்மா தெரிவித்தார்.எனினும், பள்ளி செல்லும் பெண் குழந்தைகளுக்கு 100 ரூபாய் ஊக்கத்தொகை வழங்குவதற்காக நிதி ஒதுக்கீடு குறித்து அவர் எதையும் தெரிவிக்கவில்லை.

தலைப்புச்செய்திகள்