Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சொத்தை அபகரித்த மகன் - மீட்க மூதாட்டி போராட்டம் 

டிசம்பர் 30, 2020 12:12

திருநெல்வேலி :  பெற்ற மகனே கண் தெரியாத தாயின் சொத்துக்களை அபகரித்ததால், சொத்துக்களை மீட்டுத்தர மாவட்ட ஆட்சியரிடம் தாய் மனு அளித்த சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி  மாவட்டம், வடக்கு விஜயநாராயணத்தை சேர்ந்த சண்முகவேல் என்பவரின் மனைவி ராஜகனி. இரண்டு கண்களிலும்  பார்வையை இழந்து, தற்பொழுது  உடல்நிலை பாதிக்கப்பட்டு,  நடக்க முடியாத நிலையில் உள்ளார்.

  ராஜகனி தன்னுடைய கணவர், இளைய மகன் முத்துராஜ் மற்றும் உறவினர்களுடன், திருநெல்வேலி  மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு,  காலையில்  வந்திருந்தார். 
நடக்க முடியாதபடி இருந்த அவரை, இளைய மகன் முத்துராஜ், தன் கைகளில் தூக்கி கொண்டு வந்து, மாவட்ட ஆட்சியரிடம், மனு கொடுக்கச் செய்தார். 

அதில் என்னுடைய  மூத்த மகன் கோபால்,  என்னையும் எனது கணவரையும், வயதான காலத்தில் நன்றாக கவனித்து கொள்வதாகவும், தேவைகள் எல்லாவற்றையும் பூர்த்தி செய்து தருவதாகவும்  உறுதியளித்து,  மருத்துவமனைக்கு எங்களை  அழைத்து செல்வதாக கூறி,  பத்திர பதிவு அலுவலத்திற்கு அழைத்து சென்று, என் பெயரில் உள்ள, எல்லாச் சொத்துக்களையும், அவன் பெயருக்கு மாற்றி, எங்களை வைத்து,  பதிவும் செய்து கொண்டான்.  

பாதி சொத்து, தன்னுடைய தம்பியாகிய, என்னுடைய இளையமகனுக்கே என்று, சொல்லித்தான்,பத்திரம் தயார் செய்தான். ஆனால் திடீரென,  அவனே எல்லா சொத்துக்களையும் வஞ்சமாக, தனக்கே உடமையாக்கிக் கொண்டான். அதன் பிறகு,  என்னையும் எனது கணவரையும், அவன் ஏறெடுத்து பார்ப்பதே இல்லை. அதன் காரணமாக,  நாங்கள் இருவரும், இப்போது  நடுத்தெருவிற்கு,  வந்து விட்டோம். 

கண்பார்வை தெரியாத, என்னை ஏமாற்றி, சொத்துக்களை வஞ்சமாக அபகரித்துக் கொண்டுள்ள, என்னுடைய  மூத்த மகனின் பத்திரப்பதிவு  செல்லாது என்று அறிவித்து உதவுமாறு அந்த கோரிக்கை மனுவில், ராஜகனி  தெரிவித்திருந்தார்.

தலைப்புச்செய்திகள்