Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வீரியமிக்க புதிய கொரோனா பரவும் நிலை:  லண்டனில் இருந்து வந்தவருக்கு கொரோனா

டிசம்பர் 22, 2020 06:38

சென்னை: உலகத்தையே ஆட்டிப் படைத்த கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து உலகம் தற்போது மெல்ல மெல்ல மீண்டு வர முயற்சித்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது இங்கிலாந்தில் புதிய வகை வீரியமிக்க  கொரோனா வைரஸ்  பரவுவது கண்டறியப்பட்டுள்ளது.

இது கொரோனா வைரசின் புதிய வடிவமாக வெளிப்பட்டு இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இது ஏற்கனவே பரவி வரும் கொரோனாவை விட 70 சதவீதம் அதிவேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. இதனால் இங்கிலாந்தில் இருந்து வரும் விமானங்களுக்கு பல்வேறு நாடுகளும் தடை விதித்துள்ளன. மத்திய அரசும் இங்கிலாந்துக்கான விமான சேவைக்கு தடை விதித்துள்ளது. லண்டனில் இருந்து கடந்த 10 நாட்களுக்குள் சென்னை வந்துள்ள பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறார்கள்.

இதுகுறித்து சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில் இன்று ஆய்வு செய்தாபின் நிருபர்களிடம் கூறியதாவது:- வெளிநாடுகளில் இருந்தோ, வேறுமாநிலங்களில் இருந்தோ தமிழ்நாட்டுக்கு வந்தால் தனிமைப்படுத்துமாறு அறிவுறுத்தி இருக்கிறோம். அதை கடுமையாக பின்பற்ற வேண்டும். இதை மாவட்ட கலெக்டர்களும், மாநகராட்சி அதிகாரிகளும் கண்காணிப்பார்கள். யாருக்காவது அறிகுறிகள் தோன்றினால் அவர்கள் தங்களை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

விமான நிலையங்களிலும், பணி செய்யும் இடங்களிலும் நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். கொரோனா பாதித்தவர்களுடன் பழகியவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். கடந்த 10 நாட்களில் வெளிநாடுகளில் இருந்து தமிழகத்துக்கு 1078 பேர் பயணம் செய்ததை இ-பாஸ் மூலம் எடுத்து அவர்களுக்கு அறிகுறிகள் இருக்கிறதா என்று நாங்கள் பரிசோதித்துள்ளோம். டெல்லியில் இருந்து நேற்று 533 பேர் விமானத்தில் சென்னை வந்தனர். அவர்களுக்கு பரிசோதித்ததில் எந்த அறிகுறியும் இல்லை.

இதுபோன்ற பயணிகளுக்கும் அறிகுறிகள் தென்பட்டால் நாங்களே சோதனை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்கிறோம். கடந்த 10 நாட்களுக்குள் இங்கிலாந்தில் இருந்து வந்த பயணிகளை கண்டுபிடித்து பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்துள்ளோம். இதுதொடர்பாக முதல்-அமைச்சரும் எந்த சுணக்கமும் இருக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளார். அதை நாங்கள் தீவிரமாக கண்காணிக்கிறோம்.

வெளிநாடுகளில் இருப்பவர்கள் மூலமோ, வெளிமாநிலங்களில் இருப்பவர்கள் மூலமோ நாம் தமிழகத்தில் கொரோனா பரவலை அதிகரித்துவிடக்கூடாது. நாம் கண்டிப்பாக முககவசம் அணிந்துகொள்ள வேண்டும். சென்னை ஐ.ஐ.டி.யில் பரிசோதனை செய்ததால் தான் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பை கண்டுபிடித்தோம். பொதுமக்கள் வாட்ஸ்-அப் மூலம் பரவும் தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம். எங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

ஒவ்வொரு விமான நிலையத்திலும் பயணிகள் பரிசோதனையை 24 மணி நேரமும் நாங்கள் தயாராக வைத்துள்ளோம். இதை பயணிகள் அனைவரும் கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும். 83 சதவீத கொரோனா பரிசோதனையை அரசு ஆய்வு கூடத்தில் தான் செய்கிறோம்.

இரவு நேரத்தில் வந்தாலும் பரிசோதனை செய்து கொள்ளலாம். இரவில் அறிகுறி தெரிந்தால் கூட பகலில் போகலாம் என்று தாமதம் செய்ய வேண்டாம். பதட்டமாகவும் இருக்க வேண்டியதில்லை. முதல்-அமைச்சரின் ஆணைக்கிணங்க தலைமை செயலாளர் அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு கட்டமாக என்ன செய்ய வேண்டும் என்று நடவடிக்கை எடுத்து வருகிறார். அதை அரசாணையிலும் தெளிவாக சொல்லி இருக்கிறோம்.

இ-பாஸ் மூலம் வருபவர்களை எப்படி கண்காணிக்க வேண்டும் என்பதையும் கூறி உள்ளோம். இன்று முதல் வெளிநாடுகளில் இருந்து இப்போதைக்கு எந்த விமானமும் வராது. புதிய வகை வைரஸ் பற்றி அறிகுறி தெரிந்தால் புனேயில் உள்ள என்.ஐ.டி.க்கு அனுப்பி உறுதி செய்வோம். நேற்று இரவு லண்டனில் இருந்து சென்னை வந்த பயணிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த பயணி தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவரை கிண்டியில் உள்ள கிங்ஸ் ஆஸ்பத்திரியில் தனிமையில் வைத்து சிகிச்சை அளித்து வருகிறோம்.

லண்டனில் இருந்து வந்தவர்களுக்கு பரிசோதனை செய்தபோது நெகட்டிவ் என்று வந்தது. அதுபோன்ற பயணிகளுக்கு மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டபோது ஒரு நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்த பயணி லண்டனில் இருந்து டெல்லி வழியாக சென்னை வந்துள்ளார். அவருடன் பயணம் செய்தவர்களையும் கண்காணித்து வருகிறோம் என அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்