Monday, 3rd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தப்லீக் ஜமாஅத் மீது அவதூறு பரப்பிய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்; மமக தலைவர் ஜவாஹிருல்லா

டிசம்பர் 18, 2020 10:16

சென்னை: தப்லீக் ஜமாஅத்தினர் மீது அவதூறு பரப்பிய மோடி அரசு மன்னிப்புக் கேட்க வேண்டும் என எம்.எச்.ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது, ”இந்தியாவில் கொரோனா பரவுவதற்கு காரணம் டெல்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாஅத் மாநாடுதான் என்று மத்திய அரசு தரப்பில் பரப்பப்பட்டது.

தப்லீக் ஜமாஅத்தினர்தான் இந்தியாவில் கொரோனாவைப் பரப்பும் உச்சபட்ச நபர்கள் என்றும் இவர்கள் வெடிகுண்டு போன்று நடமாடி வருகின்றார்கள் என்றும் பாஜகவினர் கடந்த மார்ச் ஏப்ரல் மாதங்களில் அவதூறு பரப்பி வந்தார்கள். இந்த அவதூறு பரப்புரைகள் மூலம் திட்டமிட்டு முஸ்லிம்கள் மீது வெறுப்புணர்வு பரப்பப்பட்டது.

வெறுப்பு பரப்புரையுடன் நிற்காமல், மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் அடிப்படையில், இந்தியாவிற்கு ஆன்மிகச் சுற்றுப்பயணம் வந்திருந்த 950க்கும் மேற்பட்ட வெளிநாட்டு தப்லீக் ஜமாஅத்தினர் நாடு முழுவதும் கைது செய்யப்பட்டனர். தமிழகத்திலும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் அடிப்படையில் 12 பெண்கள் உட்பட 129 தப்லீக் ஜமாஅத்தினர் கைது செய்யப்பட்டனர்.

இந்த சூழலில், பெரும்பாலான வெளிநாட்டு தப்லீக் ஜமாஅத்தினர் தமது தாய்நாட்டிற்குத் திரும்பவேண்டும் என்ற நிர்பந்தத்தின் காரணமாக நீதிமன்றத்தில் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டு, சிறையிலிருந்த காலம் தண்டனை காலமாகக் கருதப்பட்டு, அதற்கு மேல் அபராதமும் செலுத்தி தம் வழக்கை முடித்துக்கொண்டு தாயகம் திரும்பினர்.

இவர்களில் 44 வெளிநாட்டினர் மட்டும் தம் மீது சுமத்தப்பட்ட வழக்கை எதிர்த்து வழக்காடினர். இந்த வழக்கை விசாரித்த டெல்லி பெருநகர தலைமை குற்றவியல் நடுவர், இவர்கள் அனைவரையும் விடுதலை செய்துள்ளார்.

இவ்வாறு விடுதலைச் செய்யப்பட்ட 8 வெளிநாட்டினர் மீது பூர்வாங்க ஆதாரம் இல்லை என்றும் எஞ்சிய 36 நபர்கள் மீது கொரோனாவைப் பரப்பியதற்கான ஆதாரங்கள் இல்லை என்று விசாரணையில் தெரியவருவதாகவும் குற்றவியல் நடுவர் தனது தீர்ப்பில் கூறி உள்ளார். டெல்லியில் உள்ள தப்லீக் தலைமையகம்தான் கொரோனாவைப் பரப்பிய மையம் என்று வர்ணிக்கப்பட்டது.

இவர்களில் ஒருவர்கூட குறிப்பிட்ட அந்த காலத்தில் அங்கு இருக்கவில்லை என்றும், இவர்களைக் குற்றவாளியாக்க வேண்டும் என்ற மத்திய உள்துறை அமைச்சகத்தின் தீய நோக்கத்தை நிறைவேற்றும் வகையில்தான் இவர்கள் பல்வேறு இடங்களில் இருந்து கைது செய்யப்பட்டார்கள் என்றும் டெல்லி தலைமை குற்றவியல் நடுவர் தனது தீர்ப்பில் குறிப்பிட்டதோடு, மோடி அரசிற்குத் தனது தீர்ப்பில் கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.

இதேபோல், மும்பை உயர்நீதிமன்றத்தின் அவுரங்காபாத் கிளை அமர்வு, கொரோனா பரவல் தொடர்பாக வெளிநாட்டு தப்லீக் ஜமாஅத்தினர் மீது பதிவுசெய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டபோது, அரசியல் காரணங்களுக்காக கொரோனா பரவலாக்கத்திற்கு தப்லீக் ஜமாஅத்தினர் பலிகடாவாக்கப்பட்டனர் என்று குறிப்பிட்டது.

சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்தின் மீதான தனது வெறுப்புணர்வின் காரணமாக, வெளிநாட்டு தப்லீக் ஜமாஅத்தினர் கொரோனாவைப் பரப்பினார்கள் என்று அவதூறு பரப்பி அவர்களை 6 மாதங்களுக்கு மேலாக தமது தாய்நாட்டிற்குத் திரும்பவிடாமல் சிறையில் அடைத்து, பன்னாடுகளின் பார்வையில் இந்தியாவின் மதிப்பைச் சீர்குலைத்தமைக்காக பிரதமர் மோடி தப்லீக் ஜமாஅத்தினரிடமும் சம்பந்தப்பட்ட நாடுகளிடமும் பகிரங்க மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கைது செய்யப்பட்ட வெளிநாட்டு தப்லீக் ஜமாஅத்தினருக்கு இழப்பீடு வழங்குவதுடன் அவர்களை இந்தியாவிற்குள் மீண்டும் வருவதற்குப் பிறப்பிக்கப்பட்ட தடை ஆணையை நீக்கவேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

மோடி அரசின் உத்தரவிற்கு அடிபணிந்து தமிழகத்திற்கு விருந்தினராக வந்த 129 வெளிநாட்டு தப்லீக் ஜமாஅத்தினரைக் கைது செய்து சிறையில் அடைத்து பெரும் துன்பத்தையும் அளித்த தமிழக அரசின் சார்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் பகிரங்க மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்