Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட தயார் -பிரேமலதா விஜயகாந்த்

டிசம்பர் 11, 2020 01:19

சென்னை: சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட தேமுதிக தயாராக உள்ளது என்று அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றிய கவுன்சிலரும் தே.மு.தி.க ஒன்றிய துணைச் செயலாளருமான முருகனின் திருமணம் இன்று ஆண்டிபட்டியில் நடைபெற்றது. திருமணத்தில் தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

ஆண்டிபட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருமணத்திற்கு வருகை தந்த அவர், முன்னதாக வைகை அணை சாலை எம்.ஜி.ஆர் சிலையில் இருந்து திருமண மண்டபத்திற்கு ஊர்வலமாக வந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘சட்டமன்றத் தேர்தலுக்கு தே.மு.தி.க ஆயத்தமாகி வருகிறது. ஜனவரி மாதத்தில் விஜயகாந்த் தலைமையில் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும்.

அந்த கூட்டத்திற்கு பின்பு கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். அதுவரை அ.தி.மு.க கூட்டணியில் தொடர்கிறது. இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் விஜயகாந்த் பங்கேற்பார். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமென்றாலும் கட்சி துவங்கலாம்.

கட்சி பெயர், சின்னம் உள்ளிட்டவற்றை ரஜினிகாந்த் அறிவித்த பிறகு அவரது அரசியல் குறித்து கருத்து தெரிவிக்கிறேன். தே.மு.தி.க என்றும் விவசாயிகளுக்கு ஆதரவாக தான் இருக்கும்.

டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் அரசியல் விளையாடுகிறது என தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று சுமூக தீர்வு காண வேண்டும் என்பதே தே.மு.தி.கவின் நிலைப்பாடு.

சமீபத்தில் ஏற்பட்ட இரு புயல்களில் தமிழக அரசின் செயல்பாடுகளில் நிறை, குறை இருக்கிறது. இதுவரை உயிர் சேதம் இல்லை. மக்களுக்கு உணவு தங்குமிடம் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

வடிகால் வசதி ஏற்படுத்தாததால் சாலைகளில் மழைநீர் தேங்கி வீணாகக் கடலில் கலக்கிறது. மூன்றாவது அணி அமைவது குறித்து கேள்விகளுக்கு பதிலளித்த அவர், பொருத்திருந்து பார்க்கலாம், அரசியலில் எது வேண்டுமானாலும் நிகழலாம் என்றார்.

தலைப்புச்செய்திகள்