Friday, 10th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திமுக கொடுத்த அழுத்தம்: வாக்குறுதி அளித்த ராகுல்காந்தி

ஏப்ரல் 03, 2019 05:25

சென்னை: சென்னைக்கு கடந்த முறை ராகுல் காந்தி வந்திருந்தபோது, தொலைபேசியில் தொடர்பு கொண்ட மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் நீட் தேர்வில் விலக்கு அளிப்பதும், கல்வியை மாநிலப்பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்பதும் கட்சிப்பாகுபாடின்றி எல்லோருடைய கோரிக்கையாக இருக்கிறது. அதில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதேபோல் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குழு அமைத்தவுடன், மீண்டும் ராகுலை தொடர்பு கொண்ட ஸ்டாலின், தமிழ்நாட்டில் இது முக்கியமான பிரச்சனை, மேலும் மிகவும் எதிர்பார்ப்பை உருவாக்கக்கூடிய விஷயங்கள். இதனை நீங்கள் கொண்டு வந்தால் நல்ல வரவேற்பு இருக்கும் என்றும், இதனை நீங்கள் தேர்தல் அறிக்கையில் கொண்டு வரவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இதனையே ப.சிதம்பரத்திடமும் வலியுறுத்தியுள்ளார்.  

அதற்கு ராகுல், கண்டிப்பாக இதனை தேர்தல் அறிக்கையில் கொண்டு வருவதாக வாக்குறுதி அளித்திருந்தார். மேலும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமையும் பட்சத்தில் முதலில் செய்யக்கூடிய பணிகளில், தமிழகத்தில் நீட் தேர்வில் விலக்கு அளிப்பதில் கவனம் செலுத்தப்படும் என்றும் கூறியிருந்தார்.  

இந்த நிலையில் டெல்லியில் ராகுல் காந்தி, சோனியா காந்தி  மற்றும் மன்மோகன் சிங் ஆகியோர் செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். அதில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், நீட் தேர்வுக்கு பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு இருக்கும் நிலையில் அந்த தேர்வு ரத்து செய்யப்படும். நீட் தேர்வுக்கு இணையாக மாநிலங்கள் மருத்துவத்துக்கு தனியாக தேர்வு நடத்திக்கொள்ள அனுமதிக்கப்படும். பள்ளிக்கல்வி மத்தியப் பட்டியலில் இருந்து மாநிலப்பட்டியலுக்கு மாற்றப்படு்ம் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. 
 

திமுக கொடுத்த அழுத்தம் காரணமாகவே நீட் தேர்வில் விலக்கு மற்றும் கல்வியை மாநிலப்பட்டியலுக்கு மாற்றப்படும் என்ற வாக்குறுதிகளை காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்கிறது திமுக வட்டாரங்கள். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையால் தேர்தல் முடிவுகள் வெளிவரும் முன்பே மக்களுக்கு வெற்றி கிடைத்துவிட்டது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் கூறியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்