Monday, 3rd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சிங்கங்களுக்கு கொரோனா: டாக்டர்கள் அதிர்ச்சி

டிசம்பர் 09, 2020 11:40

சென்னை: 

ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனா உயிரியல் பூங்காவில் உள்ள நான்கு சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜாலா, நிமா, ரன் ரன் ஆகிய மூன்று பெண் சிங்கங்களுக்கும் கியும்பே என்ற ஆண் சிங்கத்திற்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதுபோக, உயிரியல் பூங்காவை சேர்ந்த இரண்டு ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

சிங்கங்களுக்கு எப்படி கொரோனா தொற்று பரவியது என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மனிதர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வதுபோலவே சிங்கங்களுக்கும் பிசிஆர் டெஸ்ட் எடுக்கப்பட்டது. பூங்கா ஊழியர்கள் அடிக்கடி சிங்கங்களுக்கு அருகே வர வேண்டியிருப்பதால் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து, கால்நடை மருத்துவர்கள் அமெரிக்காவில் நியூ யார்கில் உள்ள பிரான்க்ஸ் உயிரியல் பூங்கா அதிகாரிகளை தொடர்புகொண்டனர்.

பிரான்க்ஸ் உயிரியல் பூங்காவில் கடந்த ஏப்ரல் மாதம் நான்கு புலிகளுக்கும், மூன்று சிங்கங்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அதன்பின் அனைத்து விலங்குகளும் குணமடைந்துவிட்டன.

இதுவரை பிரான்க்ஸ் உயிரியல் பூங்காவில் மட்டுமே சிங்கங்களுக்கும், புலிகளுக்கும் கொரோனா பரவியது கண்டறியப்பட்ட நிலையில், பார்சிலோனா உயிரியல் பூங்காவிலும் சிங்கங்களை கொரோனா தாக்கியுள்ளது ஊழியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட சிங்கங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு சிங்கங்கள் ஒத்துழைப்பு அளித்துள்ளதாகவும் பார்சிலோனா உயிரியல் பூங்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்