Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு

நவம்பர் 30, 2020 12:52

சட்டவிரோத கிரானைட் குவாரிகள் குறித்து விசாரணை நடத்தி பல ஆயிரம் கோடி கிரானைட் முறைகேடு நடந்துள்ளதாக வெளிச்சத்துக்குக் கொண்டுவந்த ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு விலக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பை மீண்டும் வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத கிரானைட் குவாரிகள் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையில் விசாரணைக் குழுவை அமைத்து உத்தரவிட்டது.
அதன்படி மதுரையில் சட்டவிரோத கிரானைட் குவாரி தொடர்பாக விசாரணை நடத்திய சகாயம் தனது அறிக்கையில் ஒரு லட்சத்து 11 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருந்தார்.

இதையடுத்து, விசாரணை ஆணையர் பொறுப்பில் இருந்து சகாயம் விடுவிக்கப்பட்டார். அதேவேளையில், ஐஏஎஸ் அதிகாரி உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவருக்குப் பாதுகாப்பு வழங்கும்படி கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி அவருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு திடீரென விலக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில், கிரானைட் முறைகேடு தொடர்பான இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சிவஞானம் மற்றும் ஜெயச்சந்திரன் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்திய அதிகாரி சகாயத்திற்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். கடந்த 2018-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் விசாரணையில் பங்கேற்ற தற்போதைய அதிகாரிகளுக்கும், பணி ஓய்வுபெற்ற அதிகாரிகளுக்கும் தொடர்ந்து பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் இந்த நீதிமன்ற விசாரணைக்கு அவர்கள் உதவி தேவைப்படும் என்பதால் அவர்களுக்குத் தொடர்ந்து பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

தலைப்புச்செய்திகள்