Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விவசாயிகளைத் தீவிரவாதிகளைப் போல் மத்திய அரசு நடத்துகிறது: சஞ்சய் ராவத் குற்றச்சாட்டு

நவம்பர் 30, 2020 12:42

வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளைத் தீவிரவாதிகளைப் போல் மத்திய அரசு நடத்துகிறது. அவர்களை டெல்லிக்குள் வரவிடாமல் தடுக்கிறது என்று சிவசேனா கட்சியின் தலைமைச் செய்தித் தொடர்பாளரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் குற்றம் சாட்டியுள்ளார். மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரியும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் டெல்லி சலோ என்ற பெயரில் விவசாயிகள் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்கள். டெல்லியை நோக்கி ஹரியாணா, பஞ்சாப், உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள், விவசாய சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லிக்குப் படையெடுத்துள்ளார்கள்.

ஆனால், அவர்களை டெல்லிக்குள் அனுமதிக்காமல் டெல்லியின் புறநகர்ப் பகுதியிலேயே போலீஸார் தடுத்து நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் டெல்லி புறநகரில் இருக்கும் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் நாளுக்கு நாள் விவசாயிகள் குவிந்து வருகிறார்கள், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இன்னும் மத்திய அரசு சார்பில் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கவில்லை.

இந்நிலையில் சிவசேனா கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் நேற்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

“வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடிவரும் விவசாயிகளை டெல்லிக்குள் அனுமதிக்காதது வேதனையாக இருக்கிறது. வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்போல், தீவிரவாதிகளைப் போல் விவசாயிகளை மத்திய அரசு நடத்துகிறது. விவசாயிகளின் கோரிக்கைகளைக் கருணையுடன் மத்திய அரசு பரீசிலிக்க வேண்டும்.வேளாண் சட்டங்கள் மட்டுமின்றி, விவசாயிகளின் அனைத்துக் கோரிக்கைகளையும் கனிவுடன் மத்திய அரசு அணுக வேண்டும். பல்வேறு மாநிலங்கள் இதில் சரியான அணுகுமுறையைக் காட்டவில்லை. மத்திய அரசுதான் இதில் தலையிட்டு, விவசாயிகளுக்கு உரிய உதவிகளைச் செய்ய வேண்டும்.

விவசாயிகள் பஞ்சாப் மாநிலத்தில் இருந்தும் வந்துள்ளார்கள் என்பதால், பிரிவினையோடு நடத்தப்படக்கூடாது. பஞ்சாப் விவசாயிகளுக்கு காலிஸ்தான் காலத்தை நினைவூட்டி, நிலையற்ற போக்கை உருவாக்க மத்திய அரசு விரும்புகிறதா எனக் கேட்கிறேன். மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் மகா விகாஸ் அகாதி கூட்டணி இயல்புக்கு மாறான கூட்டணி என்று சிலர் கூறுவது தவறு. எங்கள் கூட்டணி இயற்கையான கூட்டணி. இந்தக் கூட்டணி அரசு வெற்றிகரமாக முதலாம் ஆண்டை நிறைவு செய்ததைதப் போல் 5 ஆண்டுகளை நிறைவு செய்யும்” இவ்வாறு சஞ்சய் ராவத் தெரிவித்தார்.
 

தலைப்புச்செய்திகள்