Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

’தமிழகத்தில் இருப்பது என்றும் எனக்கு மகிழ்ச்சியே’ அமித்ஷா தமிழில் டுவீட்

நவம்பர் 22, 2020 07:37

சென்னை: பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித் ஷா 2 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று சென்னை வந்தார்.  டெல்லியில் இருந்து காலை 10.50 மணிக்கு தனி விமானத்தில் புறப்பட்ட அவர், மதியம் 1.40 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்தை வந்தடைந்தார்.  தமிழகம் வந்த அமித்ஷாவை மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்திற்கே நேரில் சென்று முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம்,  அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், செங்கோட்டையன், கே.பி.அன்பழகன், மாபா பாண்டியராஜன் உள்ளிட்டோரும் வரவேற்றனர்.

பாஜக மாநில தலைவர் எல்.முருகன், மாநில பொறுப்பாளர் சி.டி.ரவி, பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் அமித் ஷாவை வரவேற்றனர். இதையடுத்து விமான நிலையத்திலிருந்து எம்.ஆர்.சி. நகரில் உள்ள தனியார் ஓட்டலுக்கு செல்ல அமித்ஷா காரில் புறப்பட்டார்.  விமான நிலையத்திற்கு வெளியே பாஜக மற்றும் அதிமுக சார்பில் தொண்டர்கள் கலை நிகழ்ச்சிகளுடன் அமித் ஷாவை உற்சாகமாக வரவேற்றனர். 

சாலையின் வழியில் நின்றுகொண்டிருந்த பாஜக தொண்டர்களை பார்த்த அமித்ஷா காரில் இருந்து கிழே இறங்கி சிறிது தூரம் நடந்து சென்று தொண்டர்களை நோக்கி கையசைத்தார். பின்னர் காரில் ஏறி புறப்பட்டுச் சென்ற அமித்ஷா எம்.ஆர்.சி. நகரில் உள்ள தனியார் ஓட்டலுக்கு வந்து சேர்ந்தார். அங்கு தங்கி சிறிது நேரம் ஓய்வெடுத்த அமித்ஷா தற்போது கலைவாணர் அரங்கம் புறப்பட்டு சென்றுள்ளார். அங்கு அரசு விழாவில் பல்வேறு திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

இந்நிலையில், தமிழகம் வந்தடைந்தது தொடர்பாக அமித்ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அதில், ‘ சென்னை வந்தடைந்தேன்! தமிழகத்தில் இருப்பது என்றும் எனக்கு மகிழ்ச்சியே. இன்று பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் எனது அன்புக்குரிய தமிழக சகோதர சகோதரிகளிடையே உரையாற்றுகிறேன்! என பதிவிட்டுள்ளார்.

தலைப்புச்செய்திகள்