Sunday, 16th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டெல்லியில் அதிகரிக்கும் கரோனா உயிரிழப்பு: அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அரவிந்த் கேஜ்ரிவால் இன்று அழைப்பு

நவம்பர் 19, 2020 05:19

டெல்லி: டெல்லியில் கரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்தும் வழிகள் குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று அழைப்பு விடுத்துள்ளார். டெல்லியில் துர்கா பூஜை, தீபாவளி, சாத் பூஜை ஆகிய பண்டிகைகளில் மக்கள் சமூக விலகலைப் பின்பற்றாதது, அதிகரித்து வரும் காற்று மாசு ஆகியவற்றால் கரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 131 பேர் உயிரழந்தனர். 7,486 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். டெல்லியில் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 5 லட்சத்தைக் கடந்துள்ளது.

டெல்லியில் நாளுக்கு நாள் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அதைக் கட்டுப்படுத்தும் வகையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு முதல்வர் கேஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார். டெல்லியில் கரோனா பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அடுத்த சில நாட்களில் கூடுதலாக 660 ஐசியு படுக்கைகள் உருவாக்கப்படும் என்று டெல்லி அரசு தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ரயில் பெட்டிகளில் கரோனா சிகிச்சையளிக்கும் வகையில் 800 படுக்கைகளை அளிக்க ரயில்வே நிர்வாகம் முன்வந்துள்ளது. இது தவிர துணை ராணுவத்திலிருந்து 45 மருத்துவர்கள், 160 மருத்துவப் பணியாளர்கள் டெல்லிக்கு கரோனா சிகிச்சையளிக்க வந்துள்ளனர்.

இதற்கிடையே டெல்லியில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று அழைப்பு விடுத்துள்ளார். அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள், எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் அனைவரும் தங்கள் தொகுதிகளில் கரோனா விழிப்புணர்வுப் பணிகளைச் செய்ய வேண்டும் என்று முதல்வர் கேஜ்ரிவால் கேட்டுக்கொண்டுள்ளார். டெல்லி பாஜக தலைவர் ஆதேஷ் குப்தா கூறுகையில், “போதுமான அளவுக்குப் பரிசோதனைகளை அதிகப்படுத்தவில்லை. முறையான தடுப்பு நடவடிக்கைகளை டெல்லி அரசு எடுக்கவில்லை. இதனால்தான் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்கிறோம்.

ஆனால், மிகவும் தாமதமாகக் கூட்டம் போட்டுள்ளார்கள். லாக்டவுன் பற்றி ஆம் ஆத்மி அரசு பேசுவதற்குப் பதிலாக முகக்கவசம், சமூக விலகலைக் கட்டாயமாக்க வேண்டும். மருத்துவமனைகளில் ஐசியு படுக்கைகளை அதிகப்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். இதற்கிடையே டெல்லியில் உள்ள ஜிடிபி மருத்துவமனைக்கு நேற்று சென்று ஆய்வு செய்த முதல்வர் கேஜ்ரிவால், அடுத்த சில நாட்களில் 660 ஐசியு படுக்கைகள் டெல்லி அரசு மருத்துவமனைகளில் உருவாக்கப்படும். ஜிடிபி மருத்துவமனையில் மட்டும் கூடுதலாக 233 ஐசியு படுக்கைகள் அமைக்கப்படும்” எனத் தெரிவித்தார். இதற்கிடையே ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) கூடுதலாக 250 ஐசியு படுக்கைகளை உருவாக்கித் தருவதாக உறுதியளித்துள்ளது.
 

தலைப்புச்செய்திகள்