Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காங்கிரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த பாஜக அரசு சதி: டி.கே.சிவக்குமார் குற்றச்சாட்டு

நவம்பர் 18, 2020 07:12

பெங்களூரு: கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- பெங்களூரு டி.ஜே.ஹள்ளி கலவர வழக்கில் எங்கள் கட்சியை சேர்ந்த முன்னாள் மேயர் சம்பத்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். கலவரத்தில் பாதிக்கப்பட்ட அகண்ட சீனிவாசமூர்த்தி எம்.எல்.ஏ. இதுவரை என்னை வந்து நேரில் சந்திக்கவில்லை. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்கள் தங்களின் வேலையை செய்கிறார்கள். ஒருவர் கூறும் கருத்து அடிப்படையில் குற்றம் செய்தவர் யார் என்பதை முடிவு செய்ய முடியாது.

நான் சட்டத்திற்கு உட்பட்டு, நீதி நேர்மைக்கு கட்டுப்பட்டு நடந்து கொள்பவர்களுக்கு ஆதரவாக இருக்கிறேன். அகண்ட சீனிவாசமூர்த்திக்கு ஆதரவாக நான் இல்லை என்று யார் சொன்னது?. இந்த கலவரம் நடந்தது முதல் அவருக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம். நான் மற்றும் கட்சியின் முன்னணி தலைவர்கள் அகண்ட சீனிவாசமூர்த்தியின் வீட்டுக்கு நேரில் சென்று பார்வையிட்டோம். அவருடன் ஆலோசனை நடத்தினோம்.

இந்த கலவரத்தில் போலீசாரின் தோல்வியை நாங்கள் எடுத்துக் கூறினோம். போலீசார் பா.ஜனதாவினரின் அழுத்தத்திற்கு பணியக்கூடாது என்றும் நாங்கள் வலியுறுத்தினோம். அகண்ட சீனிவாசமூர்த்தி உங்களிடம் (பத்திரிகையாளர்கள்) பேசுவதை விட என்னிடம் நேரில் வந்து பேச வேண்டும். தனிப்பட்டவர்களின் கருத்துகளுக்கு நான் பதிலளிக்க முடியாது. காங்கிரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பா.ஜனதா அரசு சதித்திட்டம் தீட்டியுள்ளது.

அதற்காக சம்பத்ராஜை இந்த அரசு இலக்காக கொண்டு செயல்படுகிறது. இதில் மூடிமறைப்பதற்கு ஒன்றுமில்லை. சம்பத்ராஜூவுக்கு எதிராக போலீசார் தயாரித்துள்ள குற்றபத்திரிகையை நான் படித்து பார்த்தேன். காங்கிரஸ் தலைவர்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பா.ஜனதா அரசு செயல்படுகிறது. இந்த விவகாரம் கோர்ட்டில் இருப்பதால், இதுபற்றி நான் அதிகம் பேச முடியாது. சம்பத்ராஜ் எங்கேயும் ஓடி ஒழியவில்லை. அவருக்கு உடல் ஆரோக்கிய பிரச்சினை இருந்தது. தற்போது அவர் சிக்கிவிட்டார் அல்லவா?.

நெல் விலை குறைந்துவிட்டது. அதனால் அதற்கு அரசு வழங்கும் ஆதரவு விலையை ரூ.500 உயர்த்தி வழங்க வேண்டும். நாங்கள் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக நிற்போம். கர்நாடகத்தில் இன்று (நேற்று) கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும். நாங்கள் எங்கள் ஆலோசனையை கூறியுள்ளோம். மராட்டிய மேம்பாட்டு ஆணையத்தை அரசு அமைத்துள்ளது குறித்து நாங்கள் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து தான் கருத்து கூற வேண்டும்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

தலைப்புச்செய்திகள்