Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் பா.ஜ.க. வேல் யாத்திரை: பங்கேற்க போகும் முக்கியப் பிரமுகர்கள்

நவம்பர் 02, 2020 11:04

சென்னை:தமிழகத்தில் வரும் 6-ம் தேதி முதல் டிசம்பர் 6-ம் தேதி வரை பா.ஜ.க. நடத்தும் வேல் யாத்திரை நிகழ்ச்சியில் அக்கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் பலர் பங்கேற்க இருக்கின்றனர். இதற்கு தமிழக அரசு அனுமதியளிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. முருகனின் அறுபடை வீடுகள் வழியாக நடத்தப்படும் இந்த வேல் யாத்திரை நிகழ்ச்சிக்கு விடுதலை சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் தடைகோரி வருகின்றன. இந்நிலையில் வேல் யாத்திரையில் பா.ஜ.க.வின் தேசிய நிர்வாகிகள், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர்.

பா.ஜ.க. சார்பில் நடத்தப்படும் வேல் யாத்திரையை மிகப் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார் அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன். இதற்கான முன்னேற்பாடுகளை கடந்த ஒரு மாதமாக கவனித்து வரும் அவர், யாத்திரை நடைபெறும் வழித்தடங்களில் ஏற்கனவே ஆய்வு நடத்திவிட்டார். இதனிடையே பா.ஜ.க.வினர் வேல் யாத்திரைக்கு அனுமதி கோரி காவல்துறையினரிடம் கடிதம் கொடுத்து வரும் நிலையில் இன்னும் உறுதியான முடிவு எதுவும் போலீஸ் தரப்பில் எடுக்கப்படவில்லை.

பா.ஜ.க.வின் வேல் யாத்திரையில் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, பிரகாஷ் ஜவடேகர், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது. இதனால் காவல்துறையினர் வேறு வழியின்றி வேல் யாத்திரைக்கு பாதுகாப்பும், அனுமதியும் கொடுத்தாக வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

திருத்தணி அல்லது திருச்செந்தூரில் நடைபெறும் வேல் யாத்திரை நிகழ்ச்சியில் பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா கலந்துகொள்ள உள்ளார். இதுமட்டுமல்லாமல் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களை சேர்ந்த இன்னும் சில முதலமைச்சர்களுக்கும் எல்.முருகன் அழைப்பு விடுத்திருக்கிறார். இதன் மூலம் தமிழகத்தில் நடத்தப்படும் வேல் யாத்திரை தேசியளவில் கவனம் ஈர்க்க உள்ளது.
பா.ஜ.க. நடத்தும் வேல் யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் டி.ஜி.பி.யிடம் கடிதம் கொடுத்திருக்கின்றனர். 

இதேபோல் மே 17 இடக்கத்தினர், தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர், உள்ளிட்டோரும் வேல் யாத்திரைக்கு தடை கோரி வருகின்றனர். ஆனால், இதைப் பற்றி பா.ஜ.க. தமிழக தலைமை அலட்டிக்கொள்ளாமல் யாத்திரைக்கான ஏற்பாடுகளை கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது. பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6ம் தேதி தமிழகத்தில் வேல் யாத்திரை முடிவுறும் என்று பா.ஜ.க.வினர் தெரிவித்துள்ளதால் தமிழகத்தில் உள்ள அ.தி.மு.க. அரசு இதற்கு அனுமதியளிக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
 

தலைப்புச்செய்திகள்